ஒரே சார்ஜில் 300 கி.மீ. தூரம் பயணிக்கலாம்! ஓலாவுக்கு டஃப் கொடுக்கும் ‘சிம்பிள் ஒன்’! சாதக, பாதகங்கள் என்னென்ன?

0
247

ஓலா, ஏதர் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஒரே சார்ஜில் 300 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் களமிறங்குகிறது இந்திய தயாரிப்பான ’சிம்பிள் ஒன்’. ஆனால் விலையோ….!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் தனக்கான இடத்தை பிடித்துள்ளது. பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப்பான சிம்பிள் எனர்ஜி என்ற நிறுவனம்தான் இந்த ஸ்கூட்டரை உற்பத்தி செய்கிறது. ஓலாவுக்கும் – சிம்பிள் எனர்ஜிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஓலா டெலிவரியாகும் என்று சொல்லப்பட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் சிம்பிள் எனர்ஜி நிறுவனம், சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரில் ஒரே சார்ஜில் 236 கி.மீ. தூரம் பயணிக்கலாம் என அந்நிறுவனம் கூறுகிறது.

ஓலா போலவே இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில்தான் இயங்குகிறது. ஓசூரில் உள்ள தொழிற்சாலையானது, ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் யூனிட்டுகள் தயாராகும் அளவுக்குத் திறன் கொண்டிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. தருமபுரியில் இன்னொரு தொழிற்சாலை தயாராகி வருகிறது. இதில் ஆண்டுக்கு 12.5 மில்லியன் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் அளவுக்கு மேம்பட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.

ஓலாவுக்குக் கடுமையான போட்டி ஏற்படுத்துவதற்காகவே – ஜியோஃபென்சிங், ட்யூப்லெஸ் டயர்கள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன், இன்பில்ட் நேவிகேஷன், டயர்களில் காற்று குறைகிறதா என்பதைச் சொல்லும் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ட்ரிப் மீட்டர், ரேஞ்ச் மீட்டர், கடிகாரம், போனிலேயே ஆப்பரேட் செய்து கொள்ளக்கூடிய ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பாட்டுக் கேட்பது, போன் கால்கள் அட்டெண்ட் செய்துகொள்வது, மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் போன்ற வசதிகளைக் கொடுத்திருக்கிறது சிம்பிள் எனர்ஜி.

ஓலாவைவிட (3.97kWh) பேட்டரி பேக்கேஜில் சிம்பிள் ஒன் மேம்பட்டு இருக்கிறது. இதில் இருப்பது 4.8kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கேஜ். ஓலாவில் Normal, Sport, Hyper என 3 ரைடிங் மோடுகள்தான். ஆனால் இதில் Eco, Ride, Dash, Sonic என்று 4 ரைடிங் மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். எக்கோ மோடில் 45 முதல் 50 கி.மீ வரை டாப் ஸ்பீடு போகலாம். பெர்ஃபாமன்ஸ் மோடில் 105 கி.மீ வரை செல்லலாம். பிக்–அப்பும் அதிகம்.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் கொடுத்திருக்கிறார்கள். 200/190 மி.மீ டிஸ்க்குகள் கொடுத்திருக்கிறார்கள். பூட் ஸ்பேஸில் ஓலாவைவிட 6 லிட்டர் குறைவாக, 30 லிட்டர் என்று இருக்கிறது சிம்பிள் ஒன். ஆனால், சீட்டுக்கு அடியில் ஒரு ஹெல்மெட்டும், கொஞ்சம் லக்கேஜும் வைத்துக்கொள்ளலாம்.

சாதாரண சார்ஜரில் சார்ஜ் போடும்போது, ஓலாவைப் பொறுத்தவரை 5.30 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் என்றால், 75 கி.மீ போகும் அளவுக்கு18 நிமிடங்களில் சார்ஜ் ஏறியிருக்கும். இதுவே சிம்பிள் ஒன்னில் ஃபாஸ்ட் சார்ஜிங்கிலேயே 75 கி.மீ–க்கு 30 நிமிடங்கள் ஆகும். மற்றபடி நார்மல் சார்ஜிங்குக்கு அதே நேரம்தான்.

ஏற்கெனவே ஒரு தடவை சார்ஜ் செய்தால், 236 கி.மீ தூரம் போகும் என்று க்ளெய்ம் செய்து வந்தது சிம்பிள் எனர்ஜி. இது எக்கோ மோடில் ஓட்டினால்தான் இது சாத்தியம். ஆனால், இப்போது அதையும் தாண்டி ஒரு ஸ்பெஷல் ஆப்ஷனை வழங்குகிறது அந்நிறுவனம். எக்ஸ்ட்ரா பேட்டரி பேக்கேஜ் கொண்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் ஒன்றை மார்க்கெட்டில் விடவிருக்கிறது. இதன் பேட்டரி பவர் 6.4kWh. சுமார் 300 கி.மீ தூரம் ஒரே சார்ஜில் கிடைக்கும் என்று க்ளெய்ம் செய்கிறது சிம்பிள் எனர்ஜி. மேலும், இதில் கழற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய Detachable Battery–களைக் கொடுத்திருக்கிறார்கள்.

சிம்பிள் ஒன் எக்ஸ் ஷோரூம் விலை, அடிப்படை மாடல் 1.10 லட்சமாகவும், மேம்படுத்தப்பட்ட மாடல் 1.45 லட்சமாக இருக்கிறது. ‘சிம்பிள் ஒன்’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான், இப்போதைக்கு இந்தியாவின் அதிக ரேஞ்ச் கி.மீ. கொண்ட ஸ்கூட்டர். ஏற்கனவே ரூ.1,900 செலுத்தி புக்கிங் செய்தவர்களுக்கு 2021 இறுதியில் டெலிவரி என்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இப்போது ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். ஜுன் மாதமாவது கிடைக்குமா? என்றால், சந்தேகமே என்கின்றனர் மோட்டார் வாகன தொழில் சார்ந்து இயங்குபவர்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry