காதலரை மணம் முடித்த அமைச்சர் சேகர் பாபு மகள்! பெங்களூரு போலீசில் தஞ்சம்! அச்சுறுத்தல் இருப்பதாக பேட்டி!

0
1127

காதலரை திருமணம் செய்து கொண்ட, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பெங்களூரு காவல்துறையை அணுகியுள்ளார்.

சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷ்குமார், அமைச்சர் சேகர்பாபு வசிக்கும் ஏரியாவில் பல வருடங்களாக வசித்து வருகிறார். சதீஷ்குமாரும் சில காலம் திமுகவில் உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அமைச்சர் சேகர்பாபு வீட்டிற்கு கட்சிப்பணிகளுக்காக சென்று வந்துள்ளார். அப்போது தான் சேகர்பாபுவின் மகள் மருத்துவரான ஜெய கல்யாணியுடன் சதீசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 6 வருடங்களாக காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சதீஷ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அமைச்சர் சேகர்பாபு தனது மகளுக்கு சதீஷ்குமாரை திருமணம் செய்து வைக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. சேகர்பாபு தொடர்ந்து தங்களை மிரட்டி வருவதாகவும், சொல் பேச்சை கேட்கவில்லை என்றால் பொய் வழக்குப் போட்டு சிறையில் குண்டர் சட்டத்தில் அடைத்து விடுவேன் என்றும் மிரட்டுவதாகவும் சதீஷ்குமார் ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபுவின் மகள் திங்கள்கிழமை தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த்திடம் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மகள் ஜெயகல்யாணி, சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலிக்கிறேன், இதற்கு எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரை திருமணம் செய்ய முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்து இரண்டு மாதங்கள் காவலில் வைத்திருந்தனர். இதன் பின்னனியில் என் தந்தையின் பங்கு இருப்பதாக சந்தேகிக்கிறேன். நான் 18 வயதுக்கு மேல் உள்ள பெண். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தமிழகம் திரும்பினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளோம்.” இவ்வாறு ஜெயகல்யாணி கூறினார். கன்னட தொலைக்காட்சிக்கு அவர் தமிழில் அளித்துள்ள பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக இந்து மத ஆர்வலர் பரத் ஷெட்டி, “ஜெய கல்யாணி – சதீஷ்குமார் இருவரும் திருமணம் செய்து கொள்ள உதவி கோரி சமூக ஊடகங்களில் தங்களை அணுகினர். இந்து பாரம்பரியத்தின்படி திருமண விழாவை ஏற்பாடு செய்தோம். பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து அவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனவே பாதுகாப்பு தருமாறு பெங்களூரு காவல்துறையிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry