ரஷ்ய தாக்குதலின் காட்சிகள்! 13-வது நாளாக நீடிக்கிறது போர்! 10ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை!

0
235

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். இந்தியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த மாதம் 24-ந் தேதி ரஷ்யா போரைத் தொடங்கியது. எல்லைப் பகுதிகளை தாக்க தொடங்கி பிறகு படிப்படியாக முன்னேறி, துறைமுகம், ஏர்போர்ட் என முக்கிய இடங்களை தாக்கியது. தலைநகர் கீவை கைப்பற்றிவிட்டால் உக்ரைனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற அடிப்படையில் கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது.

A photograph taken on March 7, 2022 – Kharkiv. (Photo by Sergey BOBOK / AFP) (Photo by SERGEY BOBOK/AFP via Getty Images)
500 கிலோ ராட்சத “ரஷ்ய” குண்டு

ஆனால், உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷ்யா படையினரால் கீவ் நகருக்குள் திட்டமிட்டபடி முன்னேற முடியவில்லை. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வடகிழக்கு நகரமான சுமி ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன. ரஷ்ய தாக்குதலின் பிரத்யேகக் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அந்த நகரங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் உக்ரேனியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சுமி நகரில் 700-க் கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி யுத்த களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர்கள் சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது. குறிப்பாக சுமி பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவுமாறு ரஷ்யாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. “ஆப்ரேஷன் கங்கா” என்ற பெயரில் உக்ரைனில் தங்கியிருக்கும் நம் மாணவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

Indian students, returned from Ukraine

இந்த நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. அந்த நகரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா கூறியது.

அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் (மாஸ்கோ நேரம்) ரஷியா மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காக போர் நிறுத்தப்பட்டு உள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் உக்ரைன் மக்கள் தாங்கள் விரும்பும் வழிகளில் விரும்பும் நாடுகளுக்குச் செல்லும் வகையில் ரஷ்யா மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப் பெரிய அளவில் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகும் சூழல் உருவாகியுள்ளது என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனிலிருந்து 10.7 லட்சம் பேர் உயிர்பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்டமாக, இந்த நிலையில் ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மிரோ குலேபா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை பகுதியான அண்டலியா மாகாணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry