கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்ப்பேட்டையை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். கரும்பு வெட்டும் சீசன் முடிந்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது அவரது வழக்கம்.
அந்த வகையில் ஆண், பெண் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்ட வழிபாடு திங்கள் கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் கோழிக்கறி விருந்து அளித்ததாகக் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டவர்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மணலலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலந்தல் கிராமத்துக்கு சென்ற சுகாதாரத் துறையினர், 30-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோயிலுக்கு அருகே உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சமைத்ததால், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் கிணற்றுத் தண்ணீர் மற்றும் கோழிக்கறி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மணலூர்பேட்டை காவல்நிலைய போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry