பாஜக மீது அதிமுக சரமாரி விமர்சனம்! பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு!

0
324

காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா பேரவை அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கோகுல இந்திரா, வளர்மதி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான பொன்னையன், “அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க இருந்தாலும், அதன் வளர்ச்சி அ.தி.மு.க., தமிழகம் மற்றும் திராவிடக் கொள்கைகளுக்கு நல்லதல்ல. தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது.

கர்நாடக பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாம். கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்கிறது.

கோப்புப் படம்

அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக பாஜக செய்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக குரல் எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

பாஜகவின் அணுகுமுறையை அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். கட்சி உறுப்பினர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று கூறினார். மேலும், தமிழகத்துக்கு சாதகமாக கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாஜகவுக்கு அறிவுரை வழங்கிய பொன்னையன், அப்போதுதான் அக்கட்சி இங்கே வளர முடியும்,” என்றும் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry