அரசுப் பள்ளி ஆசிரியர்களை காயப்படுத்துவதா? வசந்திதேவிக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்!

0
1542

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்து மூத்த கல்வியாளர் வசந்திதேவி எழுதிய கட்டுரைக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை, தலைமைச் செயலாளர் வெ. இறையன்புக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.

வா. அண்ணாமலை

மூத்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்திதேவி, 30.05.2022 இந்து தமிழ் திசை நாளேட்டில் “இளைஞர்களுக்கு துரோகம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்ததை படித்துப் பார்த்தோம். இதனால் அதிர்ச்சியும் ஏற்படவில்லை, கோபமும் வரவில்லை, காரணம் அந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் பழுத்த கல்வியாளரின் நிறமும், குணமும், உள்ளக் கருத்தும் மாறவே இல்லை.

ஆதாரம் : இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம் – வே. வசந்தி தேவி

கல்விக் கருத்தரங்கில் பேசும்போது கூட வசந்திதேவி, அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டேதான் போவார். கடமையைச் செய்யாதவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றும், ஒரு படி மேலே போய் விமர்சனம் செய்வார்கள். பள்ளி நிர்வாகத்தினை முழுவதுமாக ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி பேசுவார்கள். எண்ணத்தால் வேந்தராகவே இருக்கக்கூடியவர்; சாதாரண மக்களைப் பற்றி பேசுவார்கள்; ஏழை எளிய மாணவர்கள் பற்றி உருக்கமாக பேசுவார்கள்; ஆனால் ஏழை எளிய மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களுடனும் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன நிலையினை அறிய மனம் வராத பழுத்த கல்வியாளர் இவராவார்.

கோப்புப் படம் : வசந்தி தேவி

இளைஞர்களுக்கு ஆசிரியர்கள் என்ன துரோகம் செய்தார்கள்? கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்ற பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல், எந்த வித்தியாசமும் பார்க்காமல் அன்றாடம் இல்லம் தேடி சென்று கலந்துரையாடிய ஆசிரியர்கள், மாணவர்களின் வறுமை பாதிப்பினை தாய்மை இடத்திலிருந்து பகிர்ந்துகொண்ட ஆசிரியர்களுடைய எண்ணச் செயல்பாடுகளை ஊடகங்களும் நாளேடுகளும் எழுதி பாராட்டி வந்ததை பழுத்த கல்வியாளரின் பார்வையில் படவே இல்லையா..?

அன்றாடம் மாணவர்களால் ஆசிரியர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும், கலாச்சார சீரழிவின் மூலம் ஆசிரியர்கள் பல்முனைத் தாகுதலுக்கு உள்ளான போதும் இவர்கள் இதயமாவது வருத்தப்பட்டது உண்டா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், ஆசிரியர் இயக்கங்களும் மாணவர்களின் வார்த்தைகளால் சொல்ல முடியாத இந்த கலாச்சார சீரழிவுக்கு கண்டனம் தெரிவித்த போது “பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்” சீறிப்பாய்ந்து வந்ததை நாங்கள் கண்டு வேதனை அடைந்ததுண்டு.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அரசு செயல்படுத்துவதற்கு முன்பே மாணவர்களின் இல்லம் தேடிச் சென்று கற்பித்த ஆசிரியர்கள் நம்முடைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பகுதிகளுக்குச் சென்று ஆதரவு தெரிவித்தவர்கள். உதவியினை செய்தவர்கள். இரவு பகல் பாராது கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கியவர்கள் நம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

தன் உயிரையும் துச்செமென நினைத்து பேரிடர் காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று விபரங்கள் திரட்டியவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிதியினை வழங்கிய ஆசிரியர்களின் பட்டியலும் உண்டு. பல அரசு மருத்துவ மனைகளுக்கு உயிர்காக்கும் உபகரணங்கள் வழங்கிய ஆசிரியர்கள் ஏராளம் பேர் உண்டு. இவையெல்லாம் மூத்த கல்வியாளரின் கண்ணில் தெரியவில்லையா..?

வசதி வாய்ப்பு உள்ளவர்கள் எல்லாம் தனியார் பள்ளியில் படிக்க வைத்து விடுகிறார்கள். வறுமைக் கோட்டுக்கும் கீழே அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்படக் கூடியவர்களின் பிள்ளைகள்தான் அரசுப்பள்ளிகளில் வந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவனிடம் முகத்தில் சோகம் படர்ந்து இருந்தால் அவனை அழைத்து விசாரிக்கும் தாயுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை இன்னமும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

மத்திய அரசு நினைத்தது போல கொரோனா காலம் பிள்ளைகளுக்கு நவீன குலக்கல்வித் திட்டத்தை வளர்த்து விட்டது என்றுதான் சொல்ல முடியும். ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல ஆசிரியர்களுடைய இதயங்களை சேதாரப்படுத்தி வருவதை மூத்த கல்வியாளர்கள் போன்றவர்கள் இனிமேலாவது நிறுத்திக்கொள்வதுதான் மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்கு வழிகாட்டியாக அமையும்.

பள்ளி திறந்தவுடன் பிள்ளைகளுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் உறவினைப் புதுப்பித்துக் கொள்வதற்கோ? பள்ளியில் படிக்கும் சூழலை ஏற்படுத்துவதற்கோ? அல்லது எல்லா மாணவர்களுடனும் உரையாடுவதற்கோ? இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுமதித்தார்களா? அவகாசம் வழங்கினார்களா? எமிஸ் இணையத்தில் புள்ளிவிபரம் பதிவேற்றம் செய்யச் சொல்லி ஆசிரியர்களை சித்திரவதை செய்தார்கள்.

பழுத்த கல்வியாளர் வசந்திதேவி அவர்கள் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்கள். கல்வியைப் பாதுகாக்கும் முழு பொறுப்பு ஏற்று இருக்கின்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன உணர்வுகளை சித்திரவதை செய்து, மக்கள் மத்தியில் அவர்களது தோற்றத்தினை சேதாரப்படுத்திவிட்டு இந்தப் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் எதனைப் பாதுகாக்க போகின்றது..? இந்து தமிழ் திசையில் இவர் எழுதிய கட்டுரையைப் பார்த்து, நம் குடும்பத்து பிள்ளைகளான, சகோதரி ஆசிரியர் உமா அவர்களும், சகோதரர் விழியன் அவர்களும் இன்னும் பல ஆசிரியர்கள் தம்பி, தங்கைகள் எழுதிய இதயக் குமுறல்களைக் கண்டு பெருமிதம் கொண்டோம்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்ற அரசு பள்ளி ஆசிரியர் அன்புள்ளங்களே…! நாம் வழியே ஏகுவோம்!… வழியே மீளுவோம்..! இவர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படத் தேவை இல்லை… ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை காட்டுவோம்..! கல்வி சிறந்த தமிழ்நாடு..! என்ற பாரதியாரின் வரிகளுக்கு பெருமைக்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் நமது பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்!.. உருவாக்குவோம்!.. கற்றல்-கற்பித்தல் நமது தூய பணி தொடரட்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry