பன்முகத் தன்மை உடைய பல்வேறு அறிவிப்புகளை, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் தொடர்ந்து அறிவித்து வந்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டுள்ளார் என தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் முதலமைச்சர் பதிலுரையுடன் நிறைவு(மே-10) பெற்றுள்ளது. மே 6ஆம் தேதி, ஓராண்டு ஆட்சி நிறைவு நாளில், நூறாண்டுகள் பேசும் சாதனைகளை ஓராண்டில் நிகழ்த்திய முதலமைச்சரை வாழ்த்திப் புகழாரம் சூட்டி அனைவரும் சட்டப்பேரவையில் மகிழ்ந்துள்ளார்கள். இதை தமிழக ஆசிரியர் கூட்டணியும் வரவேற்று பெருமிதம் கொள்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கை குழுத் தலைவரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர். பாலு உள்பட அனைவரும் உறுதி அளித்தார்கள். இதுகுறித்து முதலமைச்சரும் உறுதிபடப் பேசி வந்தார்.
நமது அரசு, எங்கள் அரசு என்று வாயாரப் புகழ்ந்து வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களைப் பற்றி ஒரு வரிக் கூட உச்சரிக்காமலேயே, விதி எண் 110ன் கீழ் பன்முகத் தன்மையுடன் எல்லா அறிவிப்புகளும் வந்தன. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம். மனம் குளிர வரவேற்க வேண்டிய சிறப்பு அம்சம் இதுவாகும்.
பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வாழ்த்துச் சொல்லச் சென்ற ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களைப் பார்த்து பொக்கை வாய் சிரிப்புடன், உங்களால் வளர்ந்தவர்கள்; உங்களால் ஆளாக்கப்பட்டவர்கள்; உங்களால் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்; வாழ்த்துங்கள் என்று கூறி அழைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகனும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை இதயப் பற்றுதலுடன் பாதுகாத்து வந்தார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின், சமத்துவமாக, சமூக நீதியைப் பாதுகாப்பதில் எங்களுக்கும் பெருமிதம் உண்டு. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்து வந்தது. முதலமைச்சர் முன்னிலையிலேயே, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அந்த நம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விட்டார்.
அவர் கொடுத்த புள்ளிவிவரங்களில், குறிப்பாக 9 லட்சம் பேர் அரசு ஊழியர்கள் உள்ளார்கள், 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. சராசரியாக 40 ஆயிரம் என்ற ஊதியத்தை வைத்து 10% அரசு செலுத்தவேண்டும் என்று சொன்னாலும், ஒருவருக்கு 50 ஆயிரம் தான் வருகிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.2 லட்சம் செலவாகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதால் 4 மடங்கு செலவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறார்.
ஆனால், கடந்த 8-ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், படிப்படியாக பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கிறார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை எப்படி படிப்படியாக அமல்படுத்த முடியும்? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம், முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்களா?
ஏதாவது செய்யலாம் என்று முதலமைச்சருக்கு எண்ணமிருந்தாலும், நிதியமைச்சர் போட்ட அதிரடி கணக்கு அவரை மௌனம் காக்க வைத்துவிட்டது. ராஜஸ்தான் அரசு நிதியைச் சந்தையில் முதலீடு செய்து விட்டார்கள். அதை எடுத்துக் கொள்வதற்கு சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி ராஜஸ்தான் அரசு கவலைப்படவில்லை. ஆனால் நமது பணத்தை, மத்திய அரசுக்கு நாம் செலுத்தி இருக்கிறோமே தவிர, மத்திய அரசு அதைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு, முந்தைய அரசும் சரி, தற்போதைய அரசும் சரி, இதுவரை ஒப்புதல் அளிக்க வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.
ஆசிரியர் சங்கங்கள் 148 கோரிக்கைகளை இதுவரையில் அளித்துள்ளார்கள் எனக் கூறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதலமைச்சர் அதனை படிப்படியாக நிறைவேற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக ஆசிரியர் சங்கங்கள், தங்களுடைய கோரிக்கைகளை 10 அம்சம் என்பார்கள், 16 அம்சம் என்பார்கள், 20 அம்சம் கூட என்பார்கள், அவ்வளவுதான். ஆனால் 148 அம்ச கோரிக்கைகளை நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்தால் கூட இன்றைய காலகட்டத்தில் எங்களால் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணுகிறோம்.
148 கோரிக்கை எல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றக் கேட்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறையில் உத்திரப்பிரதேச யோகி அரசின் கல்வி நிர்வாக அமைப்பு இன்னமும் தொடர வேண்டுமா? எவ்வித நிதி ஆதாரமும் இல்லாமல், செலவும் இல்லாத இந்தக் கோரிக்கையினை நிறைவேற்றி தமிழ்நாட்டின் தன்மானத்தை நிலைநாட்டிட வேண்டுகிறோம்.
கருணாநிதி சம்பாதித்து வைத்துள்ள வாக்கு வங்கியினைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை என்று நாளுக்கு நாள் வெட்ட வெளிச்சமாகிறது, வேதனையுறுகிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ், கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், டி.டி.வி.தினகரன், சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளார்கள்.
ஆட்சியாளர்கள் அவர்கள் பாதையில் செல்வார்கள். நம்மீது நம்பிக்கை வைத்து உறுப்பினர்களாக இருப்பவர்களது நலன் காக்க சங்கங்கள் பாடுபடுவோம். ஜாக்டி- ஜியோ, ஜேக்டோ-ஜியோ, டிட்டோஜாக் அமைப்புகளின் வீர வரலாற்றினை திரும்பிப் பாருங்கள். கவன ஈர்ப்புக்கு களம் காணுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் டிட்டோஜாக் பதாகையை உயர்த்திப் பிடியுங்கள். இணைந்து செயல்படக் கூடிய காலகட்டத்தில் இணைந்து செயல்படுவோம். வாருங்கள்..! கரம் கோர்த்து களத்தில் தொடர்ந்து நிற்போம், இயக்கங்களின் வீர வரலாற்றினை தொடர்ந்து படைப்போம்.” இவ்வாறு வா. அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry