ஊடகங்கள் ‘யு டர்ன்’ அடித்துவிடும்! எச்சரிக்கையாக இருங்கள் முதல்வரே! ஊடகரின் மனம் திறந்த மடல்!

0
856

வணக்கம் ஐயா,
தங்களின் திராவிட ஸ்டாக், திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு காலத்தைப் பார்த்தவுடன் இந்த மடலை எழுதும் உந்துதல் ஏற்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எமது மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் தங்களின் அரசு நிர்வாகத்தைப் பற்றிய சாதக பாதகங்களை சுட்டிக் காட்டும் அறக்கடமை எமக்குண்டு. காரணம் இது தமிழ்நாடு, தமிழர் நாடு. எங்கள் மண், எங்கள் பெருநிலம்.

தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். தங்களை முன்னிறுத்தி நடந்து கொண்டிருப்பது, ஆட்சி அல்ல -வெறும் காட்சி மட்டுமே என்பதாகவே தோன்றுகிறது. ஒரு பொய்யான, மாயத் தோற்றத்தை உருவாக்கி உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய பல பத்திரிகைகளும், ஊடகங்களும்; பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும்; தங்கள் தந்தை காலத்தைப் போல நேர்மை மற்றும் உண்மையானவர்களாக இல்லை.

கொடுப்பதற்குப் பணம் இல்லை; திராவிட மாடல் கொள்கைக்காக, சித்தாந்தத்துக்காக மட்டுமே பத்திரிகைகளும், ஊடகங்களும், பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் ஆதரவு தரவேண்டும். அறிவாலயத்துக்கு வந்தால் தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து கொள்ளலாம், தங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிப்பாருங்கள். தங்களை புகழ்ந்து பாடும் எத்தனை பத்திரிகை, ஊடகங்கள்; சமூக, வெகுசன ஊடகர்கள் காணாமல் போகிறார்கள், போகின்றன என்பது தெரிந்துவிடும்.

பணம் கொடுத்து, பத்திரிகை, டிவி, இணையங்களில் திமுக தொடர்பான விளம்பரங்களை தரமாட்டோம்; திராவிட மாடல் சித்தாந்தத்திற்காக, உணர்வோடு பத்திரிகைகளில், டிவிக்களில், இணையங்களில், திமுகவின் சாதனைகள வெளியிடுங்கள் என்று கூறிப்பாருங்களேன். எத்தனை பத்திரிகை, ஊடகங்கள் “திராவிட மாடல்” உணர்வோடு இலவசமாக வெளியிடும் என்பது தெரிந்துவிடும்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் அடிப்படைக்கு எதிரான “தமிழ்நாட்டுக்குள் திராவிட மாடல்” எனும் முழக்கத்தைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றாலும்கூட, இன்று எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகத் தங்களின் அரசு இருப்பதாலும் இதனை சுட்டிக் காட்டுவது எமது கடமைகளுள் ஒன்று.

தங்களுக்குத் தெரியாதது அல்ல, செய்திப் பத்திரிகையை அச்சடிக்கும் அச்சகப் பணியாளருக்கு அடுத்து, தமிழ்நாட்டில் அந்தப் பத்திரிகைகளை அதிகாலையில் முதலில் வாசிப்பவர் தங்களின் தந்தைதான். பிழைகள் இருந்தாலும், சரியாக இருந்தாலும் பத்திரிகை அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிவிடுவார். சுமார் 7 மணிக்குள் தமிழ்நாட்டின் நிலவரம் அனைத்தும் கலைஞரின் கம்ப்யூட்டர் மூளைக்குள் பதிவாகிவிடும். அன்றைய நாளின் கட்டுப்பாட்டைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு விடுவார் கலைஞர்.

அன்று பத்திரிகைகளில் உள்ளது உள்ளபடியான செய்திகள் வெளியாகின. கட்சிக்காரர்கள் தொடங்கி, அதிகாரிகள் வரை செய்யும் தவறுகளைப் பத்திரிகைகள் அன்று வெளியிட்டன. அவை ஆளும் தலைவருக்கான தகவல் தரும் பத்திரிகை, ஊடகங்களாக அன்று இருந்தன.

காலையில் செய்தித்தாள்களைக் கலைஞருக்கு முன்பாகப் படித்துவிட வேண்டும், தம்மைப் பற்றியோ, தமது துறைசார்ந்தோ ஏதும் செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்துவிட வேண்டுமென கட்சியினரும், அதிகாரிகளும் அன்று பதைபதைப்பார்கள். காலையில் அவர்களின் பிபி எகிறும். ஆனால் இன்று?

இந்த அரசின், ஆட்சியின், கட்சிக்காரர்களின், அதிகாரிகளின் தவறுகள் என்று, எத்தனை செய்திகள் நமது கண்களுக்குப்படுகின்றன? தவறே நிகழ்வதில்லை என்றுதான் இதற்குப் பொருளா? இல்லையே. பத்திரிகை, ஊடகங்களில் புகழ் பாடுதலைத் தவிர, வேறு செய்திகளே காணக்கிடைப்பதில்லையே.

தங்களுக்கும், மக்களுக்குமான இணைப்புப் பாலமாக இருக்க வேண்டிய பத்திரிகை, ஊடகங்கள், இணைய ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், ஊடகர்கள் எதுகை மோனையோடு,

நடந்தார் ஸ்டாலின்;
அதிர்ந்தது அகிலம்!

என்கிற ரீதியில் மட்டுமே செய்திகளை வெளியிடுகின்றனவே.

தங்களை ஒரு திசையில் பயணிக்க விட்டுவிட்டு, மக்களை வேறு ஒரு திசையில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். தங்களின் கட்சிக்காரர்களில் பலரோ, வெறுமனே பத்திரிகை, ஊடகங்கள், யூடியூபுகள், டிவிட்டர்களில் மட்டும் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு ஆண்டில், பெருந்தொற்றுக் காலம் தவிர்த்து, உள்ளூர்களில், ஒன்றியங்களில், வார்டுகளில் திமுகவினரால் எத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன?

வாரத்தில் ஒரு நாளாவது ஏதாவது கொள்கை விளக்கப் பொதுக்கூட்டமாவது நடந்து கொண்டிருந்ததே! பேச்சாளர்கள் உணர்வு பூர்வமாக மக்களைத் தொடர்பில் வைத்திருந்தார்களே! அன்று தெருமுனைகளில் நடந்த கூட்டங்கள் இன்று தொலைக்காட்சிகளில், யூடியூபுகளில் மட்டுமே அதிகம் நடக்கின்றன.

தங்கள் தந்தை காலத் தொண்டர்கள் நிர்வாகிகள், தங்கள் சொந்தக் காசை செலவிட்டு, பொருட்களை அடகு வைத்து, திமுக கொடியை ஏந்தினார்கள், போஸ்டர் ஒட்டினார்கள். கலைஞரின் பேச்சு, அண்ணாவின் பேச்சு, திமுக தலைவர்கள், பேச்சாளர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்க மெனக்கெட்டார்கள். அது திராவிட அரசியல் மாடல். இன்று?

பணம் கொடுக்காமல் எத்தனை விழுக்காடு கட்சிக்காரர்கள் அன்றுபோல இன்று களப்பணி ஆற்றுவார்கள்? ஆற்றுகிறார்கள்? பணம் கொடுக்கப்படாமல் எத்தனை கூட்டணிக் கட்சியினர் அன்றுபோல இன்று பாடுபடுவார்கள்? எல்லாற்றுக்குமே அதிக விலை வைத்தாகிவிட்டது.

இத்தகைய நிலையில்தான் தங்களுக்கு உண்மையான கள நிலவரங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் துல்லியமாகத் தேவை. கட்சிக்காரர்கள், கூட்டணிக் கட்சிக்காரர்கள், பத்திரிகை, ஊடகங்கள் பாரபட்சமற்று தங்களின் மேலான கவனத்திற்கு உள்ளது உள்ளபடி களநிலவரத்தைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டுவரத் தாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

சட்டமன்றத்தில், ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாமாலை பாடப்பட்டதை அன்று விமர்சித்தது திமுக. ஆனால் இன்று அதைத்தான் திமுகவினரும் செய்கின்றனர். பாராட்டப்பட வேண்டியவை பாராட்டப்படட்டும். சுட்டிக்காட்ட வேண்டியவை சுட்டிக்காட்டப்பட வேண்டும். முத்தாய்ப்பாக, இன்று தங்களுக்கு முன்பு வேகமாக ஓடும் பத்திரிகை, ஊடகங்கள் நாளை “யு டர்ன்” அடிக்காமல் போகாது.

காரணம், வாசகர்கள், பார்வையாளர்களை நம்பி மட்டுமே அவை செயல்படுகின்றன. வாசகர்கள், பார்வையாளர்களை இழந்துவிட்டு எந்தப் பத்திரிகை, ஊடகங்களும் அரசியல்வாதிகளைப் புகழ்ந்து கொண்டே இருக்காது. கடந்த காலங்களில் இவை நிகழ்ந்திருக்கின்றன. தங்களின் புகழ் மட்டுமே பாடும் பத்திரிகை, ஊடகங்களைவிட, உள்ளது உள்ளபடி தங்களுக்கு சுட்டிக் காட்டும் பத்திரிகை, ஊடகங்கள் பக்கம் கவனத்தை வையுங்கள். அதற்கான சுதந்திரத்தையும் அனுமதியுங்கள்.

கட்டுரையாளர் :- கே.எம். விஸ்வநாத், மூத்த ஊடகவியலாளர். தொடர்புக்கு : tntvnetwork@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry