ஆண்களின் புத்தி…அலையிற புத்தி…! இப்படியா கேவலப்படுத்துவீங்கன்னு காண்டாகும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

0
245

புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்யாவிட்டால் படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சிகரமான குத்தாட்ட நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சந்திரபோஸ் (தெலுங்கு) மற்றும் விவேகா (தமிழ்) ஆகியோர் எழுதியுள்ள இந்த பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடி உள்ளார். 20 மில்லியனுக்கு அதிகமான பார்வைகள் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் “ஓ அண்டாவா மாவா.. ஓஓ அண்டாவா மாவா” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழிலும் இந்த பாடல் ‘ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா’ என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலில், ஒரு பெண் எவ்விதம் ஆடை அணிந்திருப்பினும், என்ன நிறம், உயரம், தோற்றமாக இருப்பினும் ஆண்களின் புத்தி அலையிற புத்தி என்ற வரிகள் உள்ளன. பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜூனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது “அது உண்மைதானே!” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து ஆண்களையும் இந்த வரிகளின் கருத்துக்கள் தவறாக சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆந்திராவில் ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டுள்ளதால் இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என அந்தச் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோல், “புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்ய வேண்டும், இந்த பாடல் ஆண்களை தவறாக சித்தரிக்கிறது, இளஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் உள்ளது, எனவே இந்த பாடலை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் பாடலை பாடிய ஆண்ட்ரியா, நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்து பிபிசி-க்கு விளக்கம் அளித்துள்ள பாடலாசிரியர் விவேகா, இது ஆண்களை குறை சொல்லும் வகையிலான பாடல் கிடையாது. இது ஒரு Item Song! அந்த பாடலை பாடும் பெண் ஒருத்தி தன்னை நாடி வரக்கூடியவனின் பார்வை, மனநிலை ஆகியவற்றை விவரிக்கிறாள். அவளுடைய மனநிலையில் இருந்து தன்னை நாடி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் பெண்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதை சொல்கிறாள். மற்றபடி ஒட்டுமொத்த ஆண்களுமே இப்படிதான் என்று சொல்லவில்லை. ஆண்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஒரு ஆணே இப்படி பாடும்போது நீங்கள் இந்த கருத்தை வைத்தால் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இதில் ஒரு பெண் தன்னை நாடி வரக்கூடியவர்களின் மனநிலையை விவரிக்கிறாள். அப்படிதான் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry