அரசு உதவிபெறும் பள்ளி மீது மதமாற்றப் புகார்! டி.சி. வாங்கிய 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

0
58
Image Credit : BBC

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகே உள்ள கிராமம் அச்சங்குட்டம் எனப்படும் அச்சங்குன்றம். திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும், திருநெல்வேலி மாவட்ட அறக்கட்டளை சங்கத்தால் (Tirunelveli District Trust Association-TDTA) நடத்தப்படும் அரசு உதவி பெறும் TDTA தொடக்கப் பள்ளி 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சங்குன்றத்தில் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கல்வி பயின்று வந்த அச்சங்குன்றம் ஊர் மாணவர்களை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஊர் மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே 2023 மார்ச் முதல் தங்களது பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாததுடன், அவர்களது மாற்று சான்றிதழ்களையும் வாங்கி உள்ளனர். இதுவரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியை விட்டு நின்றுள்ளனர்.

அந்த மாணவர்களின் தொடக்கக் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக, இடைநின்ற மாணவர்களுக்கு சுமார் 6 கி.மீ., தொலைவில் உள்ள வீராணம் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி இறுதியாண்டு தேர்வு எழுத கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

2023-24 கல்வி ஆண்டு துவங்கிய பின்னரும் இடைநின்ற மாணவர்களை அவர்களது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. தற்போது அந்த மாணவர்களுக்கு அச்சங்குன்றம் கிராமப் பெரியவர்கள் சார்பில், ஊர் திருமண மண்டபத்தில் வைத்து, ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி கூறும் கிராம மக்கள், “முன்பு ஊருக்கு நடுவில் பள்ளி இருந்தது. ஆனால் சமீபத்தில் பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி, ஊருக்கு வடக்கே சற்று தொலைவில் புதிதாக கட்டடம் கட்டி அங்கே இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் பிரச்சனைகள் தலைதூக்கத் தொடங்கியது.

புதிய இடத்துக்குப் பள்ளி சென்ற பிறகு குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் வரத் துவங்கியது. வீட்டில் சாமி கும்பிட சொன்னால், பிள்ளைகள் ஜெபம் செய்கிறோம் என சொல்வார்கள். பள்ளிக்கு சென்று வந்த குழந்தைகளின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் எங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்களிடம் கிறிஸ்துவ மதம் சார்ந்த நூல்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். மதம் மாற்றிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் நாங்கள் எங்கள் குழந்தைகளை அந்த பள்ளிக்கு அனுப்பவில்லை.” என்றனர்.

Also Read : ஒரே மாதத்தில் 10 கொலைகள்..! செல்லரித்துப்போன சட்டம் ஒழுங்கு! நாங்குநேரி செல்வதைத் தவிர்க்கும் அன்பில் மகேஸ்!

அச்சங்குன்றம் ஊரில் தொடக்கக் கல்வி கற்க, இந்த ஒரு பள்ளி மட்டுமே உள்ளது. இதைத் தவிர, சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் தான் வேறு பள்ளி அமைந்துள்ளது. சிறுபிள்ளைகளை தனியாக அவ்வுளவு தூரம் அனுப்ப முடியாது என்பதால், தங்கள் ஊரிலேயே அரசுப் பள்ளி அமைக்க வேண்டும் என அச்சங்குன்றம் கிராம மக்கள் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதான் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.

இந்த கோரிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்ப உள்ளதாக தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்தையா கூறியுள்ளார். மேலும், “பள்ளி அமைப்பது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய முடியும். ஆனால் அதுவரை அவர்களது குழந்தைகளை அவர்கள் விரும்பும் ஏதாவது பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோரை அறிவுறுத்தியுள்ளோம். மாற்று சான்றிதழை வாங்கி விட்டு குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்காமல் வைத்திருப்பது தவறு என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம்” என்று கூறினார்.

மதமாற்ற புகார் கிளம்பியவுடன், அச்சங்குன்றம் TDTA தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியரை பள்ளி நிர்வாகம் மாற்றியுள்ளது. ஏற்கனவே இதேபள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ள ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த கல்வி ஆண்டில் இந்தப் பள்ளியில் 177 குழந்தைகள் படித்து வந்துள்ளனர். அவர்களில் 76 பேர் மாற்று சான்றிதழ் பெற்று வேறுபள்ளியில் சேர்ந்துவிட்டனர். எஞ்சியவர்கள் ‘மாணவர் அடையாள எண் (EMIS) மூலம் வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். தற்போது 16 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா மதமாற்ற புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து பிபிசியிடம் பேசியுள்ள அவர், “விசாரணையில் கிராம மக்கள் கூறும் புகாரில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றவர்களில், 52 குழந்தைகளை அவர்களது பெற்றோர் அருகில் உள்ள வேறு அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர். 76 குழந்தைகள் எந்த பள்ளியிலும் சேராமல் உள்ளனர். குழந்தைகளை உடனே பழைய பள்ளிக்கு அனுப்புங்கள் அல்லது வேறு பள்ளியில் சேருங்கள்; இல்லையென்றால் கட்டாய கல்விச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறை, காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள், அச்சங்குன்றம் ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

With Input BBC

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry