வழக்கறிஞர் சம்பத்தை வளைக்க முக்கிய கட்சிகள் தீவிரம்! முதலியார்பேட்டையில் போட்டியிடுவது உறுதி என சம்பத் சூளுரை!

0
17

புதுச்சேரியில் உள்ள பிரபல வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத்தை வளைக்க முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது உறுதி எனக்கூறும் எல். சம்பத், எந்தக் கட்சியில் இணைவது என முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

செயலாளர் விளக்கம்

புதுச்சேரியில் சில ஆண்டுகளாக பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளாலும் அதிகம் முனுமுனுக்கப்படும் பெயர் கலாம் சேவை மையம், வழக்கறிஞர் சம்பத். இவரைப்பற்றி பாசிடிவாக பலரும், நெகட்டிவாக சிலரும் கருத்து கூறினர். இதுபற்றி கேட்க சம்பத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி முதலில் பலனளிக்கவில்லை. பின்னர், கலாம் சேவை மைய செயலாளர் ராஜேஷ்பாபுவை தொடர்புகொண்டபோது, 18 ஆண்டுகளாக சிக்கலான வழக்குகளில் வெற்றிபெற்று, சம்பத் தனது திறமையை நிரூபித்துள்ளார்

நண்பர்களின் தொடர் வற்புறுத்தலால் 2018 ஆம் ஆண்டு சம்பத் தனது பிறந்த நாளை எளிய முறையில் கொண்டாட ஒப்புக்கொண்டார். அப்போது கூடிய இளைஞர் பட்டாளம் அவரை சமூக சேவையை நோக்கி ஈர்த்தது. அதற்காக அவர் தொடங்கியதுதான் கலாம் சேவை மையம். வெயில் காலத்தில், சாலை சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருதி, தனித்துவமாக 2018, ஏப்ரலில் அவர் அமைத்த பசுமை பந்தல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சேவைக்கு முன்னுரிமை

பின்னர் சுற்றுச்சூழலை மேம்படுத்துவிதமாக விதைப்பந்துகள் விநியோகம், மரக்கன்றுகள் நடுதல், கழிவு நீர் வாய்க்கால்ககளை சீரமைத்தல் போன்ற பணிகளை அவர் முன்னெடுத்தார். அதுமட்டுமல்ல, தன் சொந்த செலவில் வேல்ராம்பட்டு ஏரியை தூர்வாரியதுடன், கழிவறை இல்லா வீடுகளுக்கு அவர் கழிவறை கட்டிக்கொடுத்தார். இதுபோன்ற தன்னலமற்ற சேவைகளால் மக்கள் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார்.

சேவை மட்டுமே நோக்கம் என்றிருந்த நிலையில், தங்களுக்காக குரல் கொடுக்க சம்பத் போன்ற ஒரு பிரதிநிதி தேவை எனக் கருதி, மக்கள் அவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தத் தொடங்கினர்.  அதற்கேற்றார்போல, மக்கள் சேவைக்கு அனுமதி பெறுவது தொடங்கி, அதிகார வர்க்கம் வரை அவர் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிட்டது. எனவே, மக்களுக்கான உண்மையான சேவை செய்யவும் அதிகாரம் அவசியம் என்பதை உணர்ந்த சம்பத், அரசியலில் கால்பதிக்க முடிவு செய்துள்ளார். எந்தக் கட்சியில் இணைவது என்பதை அவர் இன்னமும் முடிவு செய்யவில்லை எனவும் ராஜேஷ்பாபு கூறினார்.

ஆதரவாளர்கள் கருத்து

சம்பத் அரசியலுக்கு வருவதும், முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதும் உறுதி என்று அவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர். கலாம் சேவை மையத்தில் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளோம், ஆனாலும் சம்பத்தின் தன்னலமற்ற சேவைக்காக அவரது அரசியல் பயணத்தில் நாங்கள் தோள்கொடுப்போம் என்கின்றனர்.

முதலியார்பேட்டை தொகுதி என்றில்லாமல், புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சம்பத் ஆதரவாளர்கள் கணிசமாகவே காணப்படுகின்றனர். ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அவர்கள் பரவியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. இதன் அடிப்படையிலேயே கடந்த எம்.பி. தேர்தலின்போது, திமுக அமைப்பாளர் சிவா மூலம், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமசிவாயம், வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் சம்பத் வீட்டுக்கே சென்று ஆதரவு திரட்டியுள்ளனர்.

கட்சிகளின் கணக்கு

சம்பத் மற்றும் கலாம் சேவை மைய உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வைத்திலிங்கத்தின் வெற்றி எளிதானது. இதை உணர்ந்துள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், வழக்கறிஞர் சம்பத்தை தங்கள் கட்சிக்கு இழுத்துவிட வேண்டும் என்று மும்முரம் காட்டுகின்றன. சம்பத்தை தங்கள் பக்கம் இழுத்தால் முதலியார்பேட்டை தொகுதி மட்டுமின்றி எஞ்சிய 17 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என அக்கட்சிகள் கணக்குபோடுகின்றன.

இதனிடையே, தொலைபேசி அழைப்பை பார்த்துவிட்டு இணைப்பில் வந்த வழக்கறிஞர் சம்பத்திடம், தேர்தல் நேரத்தில் தங்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும் போல தெரிகிறதே என வினவியபோது, முதலியார்பேட்டை தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி, மற்ற விஷயங்களைப் பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று முடித்துக் கொண்டார்.