கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட தடை! மீறினால் சிறை என டிஜிபி எச்சரிக்கை!

0
30

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறியுறுத்தியுள்ளது. வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. எனவே அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழிபாட்டு தளங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட கூடாது. 31.12.21 அன்று இரவு, காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்தை தவிர்த்து, ரெயிலிலும், பேருந்திலும் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

அவசரத் தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேனீர் அருந்தி பின்னர் பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.

கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பர். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 ,112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் எஸ் ஓ எஸ் செயலி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry