பூமி பூஜை செங்கற்களை எட்டி உதைத்த தருமபுரி திமுக எம்.பி.? கோபமடைந்த கட்சியினர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு!

0
911

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வசதியாக நவீன நூலகம் கட்ட வேண்டும் என்று தருமபுரி பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். இதை தமிழக அரசு ஏற்றது.

இதையடுத்து நவீன நூலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தருமபுரி பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் இந்த நிழச்சியில் கலந்து கொண்டனர்.

Also Read : மக்களவை சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார்! ஆ. ராசாவின் தற்காலிக சபாநாயகர் பொறுப்புக்கு சிக்கல்!

பூமி பூஜை போடுவதற்காக முதலில் செங்கற்களுக்கு மஞ்சள் பூசப்பட்டு குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு கோபம் அடைந்த எம்பி குங்குமம் வைத்திருந்த செங்கற்களை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், முகம் சுளித்தவாறே மஞ்சள் குங்குமம் வைத்திருந்த செங்கற்களை திருப்பி வைத்தனர். அதன் பின்பு பூஜை நடைபெற்றது.

இனிமேல் இதுபோன்ற விழாவுக்கு செந்தில்குமார் வரக்கூடாது என அங்குக் கூடியிருந்த திமுகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.  திமுக கொடியை அவர் காரில் கட்டாதது குறித்தும் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கக்கூடாது என பலமுறை கூறியுள்ளேன், அதையும் மீறி ஏன் அழைக்கிறீர்கள் என நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளரிடம் கடும் கோபத்துடன் கேட்டுவிட்டு கிளம்பினார்.

இதனால் அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்களே கடும் கோபத்துக்குள்ளாகினர்.  அங்கு எம்.பி. ஆதரவாளர்கள் சிலருக்கும், ஏனைய திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இனி எங்கள் பகுதியில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் எம்.பி. வரக்கூடாது என திமுகாவினரே தெரிவித்தனர். செந்தில்குமாரின் செயலுக்கு திமுகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் செங்கற்களை எட்டி உதைக்கவில்லை என்று மறுத்துள்ள தருமபுரி எம்.பி. செந்தில்குமார், வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதாக கூறியுள்ளார். பூஜைக்கு வைத்திருந்த செங்கல்லில் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டிருந்தது, விழாவில் அவற்றை எடுத்து வைத்து பணியை துவக்கி வைத்தேன், பூமி பூஜைக்கு என்னை அழைத்தபோது மதம் தொடர்பான நிகழ்வுகள் இருக்கக்கூடாது என அதிகாரிகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry