கேரளாவுக்குக் கனிமம் கொண்டு செல்வது தொடர்பான ஐகோர்ட் உத்தரவால் கடும் அதிருப்தி! வழக்கில் இணைய விவசாயிகள் சங்கம் முடிவு!

0
40

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த `இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ பொதுச் செயலாளர் நாகராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 10 சக்கரங்களுக்கும் அதிகம் உள்ள லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து வேல்ஸ் மீடியாவுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, “இந்த வழக்கு தொடருவதற்காகவே ’இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

80 சதவிகித மலைகளைக் கொண்ட கேரள மாநிலம், 20 சதவிகித மலைகளைக் கொண்ட தமிழகத்தை, கனிம வளங்களுக்காக நம்பியிருப்பதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. நமது கனிமவளம் நக்குத்தான், எஞ்சியிருந்தால்தான் மற்றவர்களுக்கு.

Also Read : 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளிலும் கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லலாம்! ஐகோர்ட் அனுமதி!

அடுத்த மாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்ல தடை இருக்கிறது. மணல் மீண்டும் உற்பத்தியாகிவிடும். அப்படியிருக்கும்போது, உற்பத்தி செய்ய முடியாத, இயற்கையாலும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத கருங்கல், எம். சாண்ட், ஜல்வி போன்றவற்றை எப்படி அடுத்த மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க முடியும்.

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி

கிருஷ்ணகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் கனமக் கொள்ளைக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த கனிம வளங்களையும், மற்ற மாநிலங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் கொண்டுபோவது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது.

இதற்குத் தடை விதிக்குமாறு, பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், நீதிமன்றமே விதிகளுக்கு உள்பட்டு கனிமங்களை கொண்டு செல்ல அனுமதிக்கிறது. இதனால் நமது மாநிலம் பாலவைவனம் ஆகிவிடாதா? 10, 18, 22 என எத்தனை சக்கர லாரியில் போனால் என்ன?, கனிமங்களை வண்டியில் கொண்டுபோகத் தடையில்லை என்று மட்டும்தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Also Read : Mines Mafia-க்களால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு! நெல்லை, தென்காசியில் மலையாளிகள் குவாரி அமைக்க அரசு அனுமதி!

எடுத்துச் செல்லப்படும் கனிமவளம், அரசிடம் அனுமதி பெற்று, முறையாக வரி செலுத்தி வெட்டி எடுக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளம் முறையாக அனுமதி பெற்ற கிரஷரில் இருந்துதான் கொண்டுவரப்படுகிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். ஆனால் அரசு இதைச் செய்வது இல்லை. லாரி உரிமையாளர்களோ, மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்ல டிரான்சிட் பாஸ் இருக்கிறது, விதி இதனை அனுமதிக்கிறது, எங்களைத் தடுக்க முடியாது என்கிறார்கள்.

அப்படியானால், இவர்கள் கொண்டு செல்லும் கனிமங்கள் அனுமதி பெற்ற குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதா? என்பதைக் கண்காணிப்பது அவசியமில்லையா? கிராமச் சாலைகள் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலைகள் வரை 5 வகையான சாலைகள் உள்ளன. இதில் கிராமச் சாலைகள் ஏற்கனவே மோசமாக உள்ளன.

கனிமங்களைக் கொண்டு செல்லும் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வண்டிகளை தடுக்கக் கூடாது என்ற உத்தரவை வைத்து, 18,32, 36 சக்கரங்கள் கொண்ட லாரிகளில் கனிமங்களை கொண்டு செல்வார்கள். 18 டன் லோடுக்கு மேல் கிராமச் சாலைகளில் கொண்டுசெல்வது கடினம். இவர்கள் அதிகமாக கொண்டு செல்லும்போது சாலைகள் பழுதாவதால், அதைச் சரிசெய்ய உள்ளூர் மக்களின் வரிப்பணம்தானே செலவிடப்படுகிறது.

Also Read : கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!

அதேபோல், யார்டு, கிரஷர், குவாரி ஆகியவை தனித்தனியாக இருக்க வேண்டும். கனிமங்களைச் சேகரிக்க மாநில நெடுஞ்சாலை ஓரம்தான் யார்டு அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காமல், யார்டு, கிரஷர், குவாரியை கிராமத்தில் ஒரே இடத்தில் அமைக்கிறார்கள்.

இந்த அம்சங்களை எல்லாம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இதையெல்லாம் சரிபார்க்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிடம் முறையிடும் வகையில், இந்த வழக்கில் ‘தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்’ சார்பில் மனுதாரராக இணைய உள்ளோம். அதாவது Implead Petition தாக்கல் செய்ய இருக்கிறோம்.” இவ்வாறு ஈசன் முருகசாமி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry