செந்தில் பாலாஜிக்கு வலுக்கும் எதிர்ப்பு! சுயேச்சையாக களமிறங்கி தோற்கடிக்க திமுக-வினர் தீவிரம்!

0
11

2 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கட்சித் தலைமை கொடுக்கும் முக்கியத்துவம், கரூர் மாவட்ட திமுகவினரை கொந்தளிக்க வைக்கிறது. எந்தத் தொகுதியில் நின்றாலும், அவரை தோற்கடிப்பதற்கான வியூகத்துடன் திமுகவினர் களமிறங்கிவிட்டனர்.

1995ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தார். 2000-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி அதிமுகவில் இணைந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர்,  மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புகளைப் பெற்றார். இதன்பிறகு கட்சி, அமைச்சர் பொறுப்புகளிலிருந்து 2015-ம் ஆண்டு ஜூலை 27ந் தேதி நீக்கப்பட்டார். பின்னர் டிடிவி தினகரனுடன் பயணித்துவிட்டு, 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி திமுகவில் இணைந்தார்.

இவ்வாறு பலகட்சிகளுக்கு சென்றுவிட்டு வந்துள்ள செந்தில் பாலாஜி, திமுக தலைவர் மு.. ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். சபரீசன் மூலமாகவே அரவக்குறிச்சி எம்.எல்.. சீட், திமுகவில் மாவட்ட பொறுப்பாளர் பதவி வரை அவர் பெற்றிருக்கிறார் என தெரிகிறது.

இதுபற்றி கரூர் மாவட்ட திமுக துணை நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, சபரீசனுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா? செந்தில் பாலாஜியைப் பற்றி சபரீசனுக்கு என்ன தெரியும்? பணம் மட்டும் இருந்தால் போதுமா? காலம் காலமாக கட்சிக்காக நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கும் போது, செந்தில் பாலாஜியை கட்சிக்குள் நுழைத்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுப்பது கட்சிக்கு அழிவைத்தான் ஏற்படுத்தும்.

உண்மையான விசுவாசிகளை புறக்கணிப்பது கட்சிக்கு நல்லதல்ல. தற்போது கரூர் மாவட்டத்தில் சகல அதிகாரங்களுடன் தி.மு.கவில் ஆதிக்கம் செலுத்தி வரும் செந்தில்பாலாஜி, எங்கள் தலைவர் கலைஞரின் உருவ பொம்மையை எரித்தவர் என்பது யாரும் அறியாதது அல்ல. அப்போதைய மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனை தோற்கடித்துதான் 2006-ல் அவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மணல் கொள்ளையடிப்பதாக போராட்டம் நடத்திதான் அதிமுகவில் பதவி வாங்கினார். கே.என். நேருவை எதிர்த்து அரசியல் செய்ததால்தான் 2011-2016 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக அவர் பதவி வகிக்க முடிந்தது. இப்படி முற்றுமுதலாக திமுகவை எதிர்த்தும், எங்கள் தலைவர் கலைஞரை தரக்குறைவாக பேசியும் அரசியலில் வளர்ந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பும், சர்வ அதிகாரகங்களும் கொடுத்திருப்பது எங்களுக்கு வேதனை தருகிறது’” என்று கூறினார்.

தான்தோன்றிமலை ரவி

மற்றொரு நிர்வாகியிடம் பேசியபோது, “கட்சியில் தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கும் சபரீசன், செந்தில்பாலாஜியை கரூர் மாவட்ட திமுகவுக்குள் நுழைத்தவுடன், கட்சிக்காக உண்மையாக உழைத்து வந்த முன்னணி நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டனர். கரூர் மாவட்ட செயலாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரன் பதவி பறிக்கப்பட்டது. கரூர் தான்தோன்றிமலை நகராட்சி தலைவராக இருந்த பெ.ரவி, பல போராட்டங்களை முன்னெடுத்து தீவிரமாக செயல்பட்டவர் , பொது மக்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் நல்மதிப்பை பெற்றவர். செந்தில்பாலாஜி மாவட்ட பொறுப்பு ஏற்றவுடன் ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனக்கு இணையாக இன்னொருவர் கட்சியில் இருக்க கூடாது என்பதே இதற்குக்கா காரணம். இதே காரணங்களுக்காக தான் செந்தில்பாலாஜி அ.தி.மு.கவில் இருந்த போது கரூர் சின்னசாமி ஓரம்கட்டப்பட்டு பின்பு அவர் தி.மு.வுக்கு வந்தார்.

இந்தத் தேர்தலில் கரூர் அல்லது அரவக்குறிச்சி என செந்தில் பாலாஜி எங்கு போட்டியிட்டாலும், அவரை தோற்கடிப்பது என கட்சியின் உண்மை விசுவாசிகள் முடிவு செய்திருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக தான்தோன்றிமலை ரவி சுயேச்சையாக களமிறங்குகிறார்.  இதேபோல மொழிப்போர் தியாகி வேலாயுதத்தின் மகனும் கரூர் நகர மன்ற உறுபினராக இருந்தவருமான கதிரவனும் செந்தில்பாலாஜிக்கு எதிராக களம் இறங்குகிறார்.

தான்தோன்றிமலை ரவி, கதிரவன் போன்று செந்தில்பாலாஜியால் அரசியல்ரீதியாகவும், தொழில்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட தி.மு.கவினர் பலர் அவரை எதிர்த்து தேர்தலில் களம் காண தயாராகி வருவதாக கரூர் மாவட்ட தி.மு.கவினர் கூறி வருகின்றனர். உங்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமே என கேட்டபோது, இப்போது மட்டும் கட்சியில் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது, இனி நடவடிக்கை எடுக்க என விரக்தியாகக் கூறுகின்றனர்.

அதேநேரம் செந்தில்பாலாஜி மீதான அதிருப்தியை வெளிக்காட்டாத திமுகவினர் பலர், தேர்தல் வேலை செய்யாமல் ஒதுங்கவும் திட்டமிட்டுள்ளனர். கரூர் மாவட்ட முன்னணி திமுக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டிருப்பதும், போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் பணமோசடி செய்துவிட்டதாக திமுக போட்ட வழக்கும் செந்தில்பாலாஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry