யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் காங்கிரசுக்கு குழப்பம்! மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புகிறார் வைத்திலிங்கம்!

0
25

மக்கள் செல்வாக்கு மிகுந்த முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்ட நிலையில், புதுச்சேரியில் எந்தத் தலைவரை முன்னிறுத்துவது என தெரியாமல் காங்கிரஸ் கட்சி திணறுகிறது. எனவே டெல்லி அரசியலுக்கு சென்ற வைத்திலிங்கத்தை, மாநில அரசியலுக்கு அனுப்ப தலைமை முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

புதுச்சேரி பிராந்தியத்தில், அனைத்து வகையிலும் பலம் படைத்த நமச்சிவாயம், ஜான்குமார் போன்றவர்களை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது. இவர்கள் பாஜகவில் ஐக்கியமாக, மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய மூத்த நிர்வாகியான லட்சுமி நாராயணன், என்.ஆர். காங்கிரஸில் இணைந்துள்ளார். இதனால் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கலகலத்துவிட்டது.

இதுபற்றி, பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி ஒருவர், “புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் டெல்லி தலைமையும், நாராயணசாமியும்தான். கடந்த தேர்தலில் நமச்சிவாயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த நிலையில், நாராயணசாமி குறுக்குசால் ஓட்டி பதவியில் அமர்ந்ததும் அனைவருக்கும் தெரியும். ஆட்சியில் இருந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேல், மாநிலத்துக்காகவோ, கட்சிக்காகவோ அவர் எதையும் செய்யவில்லை.

நியமன எம்.எல்..க்களை நியமிக்கத் தவறியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி, கிரண்பேடி மூலம் மூன்றுபேரை நியமித்துக்கொண்டது. நாராயணசாமியை முன்னிறுத்தி வரும் தேர்தலை சந்திக்க முடியாது என்பதை டெல்லி தலைமை உணர்ந்துவிட்டது. எனவே வேறு யாரை முன்னிறுத்துவது என்று தலைமை ஆலோசித்தது.

மூத்த நிர்வாகிகளான மல்லாடி கிருஷ்ணாராவ் காங்கிரஸில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், ஷாஜகான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார். கந்தசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால், பெரும்பான்மை சமூக வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை. அதேநேரம், அதிகாரத்தில் இருந்தபோது, சொந்த கட்சியினரை விட மாற்றுக்கட்சியினருக்கு மட்டுமே அதிகம் செய்தவர் என்ற புகாரும் அவர் மீது உண்டு. மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரான ஏ.வி. சுப்பிரமணியமும், கமலக்கண்ணனும் காரைக்காலைச் சேர்ந்தவர்கள்,  புதுச்சேரி  பிராந்தியத்தில் மக்களால் நன்கு அறியப்படாதவர்கள். எனவே அவர்களும் பின்தள்ளப்படுகிறார்கள்.

இவர்களைத் தவிர அனந்தராமன், ஜெயமூர்த்தி என இரண்டு எம்.எல்..க்கள் உள்ளனர். அனந்தராமன் கட்சியில் மிகவும் ஜுனியர். ஜெயமூர்த்தி, தனது தொகுதியைத் தாண்டி மக்கள் செல்வாக்கு இல்லாதவர். எனவே, வைத்திலிங்கத்தை விட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை. அதைத்தான் டெல்லி தலைமையும் முடிவு செய்துள்ளது. ஆனால் வயது மூப்பைக் காரணம் காட்டி, வைத்திலிங்கம் மறுக்கிறார். கட்சியின் தற்போதைய அலங்கோலமான நிலைதான் அவர் மறுப்பதற்கு உண்மையான காரணம்.

ஆனால் வேறு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், வைத்திலிங்கத்தை தலைமை சமாதானம் செய்துவருகிறது. அதேநேரம் நாராயணசாமியும், வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்தி வருகிறார். மாநிலங்களவை எம்.பி.யாக, தாம் மீண்டும் டெல்லி அரசியலுக்கு செல்வதாகவும், மாநில அரசியலுக்கு திரும்புமாறும் வைத்திலிங்கத்திடம் அவர் கோரிவருகிறார். எனவே வைத்திலிங்கம் மாநில அரசியலுக்கு விரைவில் திரும்புவது உறுதியாகிவிட்டது. அவர் காமராஜர் நகர் தொகுதியில மீண்டும் போடியிடுவார்என்று விரிவாகவே கூறினார்.

வைத்திலிங்கம் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை வெங்கடசுப்பா ரெட்டியார், காங்கிரஸ் கட்சி சார்பில் 1964-ல் புதுச்சேரி முதலமைச்சராக இருந்தவர். தந்தையைப் போலவே, 1991, 2008 என இரண்டு காலகட்டங்களில் ஏறக்குறைய 7.5 ஆண்டுகள் வைத்திலிங்கம் முதலமைச்சராக இருந்துள்ளார். நாராயணசாமி அமைச்சரவையில், சபாநாயகராக இருந்த அவர், தற்போது மக்களவை எம்.பி.யாக இருக்கிறார். மக்கள் மத்தியில் செல்வாக்கான இவர், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். எளிதில் அணுகக்கூடிய, அமைதியான தலைவர் என்ற பெயரும் வைத்திலிங்கத்துக்கு இருப்பதால், காங்கிரஸ்திமுக கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பை இவர் அதிகப்படுத்துவார் என்று புதுச்சேரி காங்கிரஸார் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry