Fact Check: பேருந்துகளை அடித்துநொறுக்கும் திமுக-வினர்! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

0
37

கையில் கட்சிக் கொடியுடன், திமுகவினர், கரூரில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை அடித்துநொறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேருந்துகளின் கண்ணாடிகளை திமுகவினர் அடித்து நொறுக்குகின்றனர். இதனால் பயணிகள் அலறியடித்து ஓடுகின்றனர். பொது மக்களை ஏற்றி கொண்டு போகும் பஸ்களை அடித்து நொறுக்கி திமுகவினர் அராஜகம் செய்கின்றனர், இப்போவே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால்…? என்ற கேள்வியுடன் இந்த வீடியோ பரப்பப்படுகிறது.

இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது, இது, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நடைபெற்றுள்ளது தெரியவருகிறது. அன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டதுடன், அவரது இருக்கை மற்றும் மைக் ஆகியவற்றையும் திமுக உறுப்பினர்கள் சேதப்படுத்தினர். சபை மாண்புகளை குலைக்கும் வகையில் செயல்பட்ட திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் பேரவைக்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் உத்தரவின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாக வெளியேற்றினர். அப்போது தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும், பலருக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான் கரூரில் திமுக-வினர் பேருந்துகளை சேதப்படுத்தியதுடன், சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry