குளத்தை மூடி பஞ்சாபி தாபா நடத்திய திமுக பிரமுகர்! ரூ.10 கோடி மதிப்புடைய அரசு நிலம் மீட்பு!

0
89

காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பஞ்சாபி தாபா ஹோட்டலை திமுக பிரமுகர் நடத்தி வந்துள்ளார். 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில், பெரும் சேதம் ஏற்படுகிறது. குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துகொள்வதால், பொதுமக்கள் பாதிப்படவதுடன், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை உள்ளிட்ட அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாலாஜாபாத் ஒன்றியம் சிட்டியம்பாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட புறம்போக்கு வகைப்பாட்டைச் சேர்ந்த அரசுக்கு சொந்தமான தாதான் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள், குளம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டதும், அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஜெய்சங்கர் குளத்தை மூடி பல ஆண்டுகளாக பஞ்சாபி தாபா ஹோட்டல் நடத்தி வந்ததும் உறுதியானது.

குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பஞ்சாபி ஹோட்டலை அகற்றும் பணிகள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நிலம் மீட்பு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என வருவாய்த்துறையினர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டல் நடத்திய திமுக பிரமுகர் ஜெய் சங்கரின் தம்பி தேவேந்திரன் என்பவர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்று வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்களை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry