தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் மீது திமுக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. வரும் தேர்தலுக்காக, திமுக மாநில அமைப்பாளரும்(தெற்கு), எம்.எல்.ஏ.வுமான சிவா போடும் கணக்கால், காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது.
கால் நூற்றாண்டு கால அரசியல் அனுபவத்துக்கு சொந்தக்காரரான சிவா எம்.எல்.ஏ. தொழில் பக்தி கொண்டவர், கடுமையான உழைப்பாளி என மக்களால் அறியப்படுகிறார். ஆரம்பத்தில் இருந்தே திமுக–வில் இருக்கும் சிவா, அடிமட்டத் தொண்டனாக இருந்து, தமது உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மாநில அமைப்பாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.
20 ஆண்டுகள் உருளையான்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ–வாக இருந்த சிவா, புதுச்சேரியில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, கூட்டணி ஆட்சியிலும் சரி, தனக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என மன வருத்தத்தில் இருக்கிறார். இதை பிரதிபலிக்கும் விதமாக, அமைச்சர் பொறுப்போ, சட்டப்பேரவை வளாகத்தில் பிரத்யேக அறையோ கூட சிவாவுக்கு வழங்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, வரும் தேர்தலுக்கான வியூகத்தை துல்லியமாக வகுக்கத் தொடங்கிவிட்டார் சிவா. அதாவது, காங்கிரஸுக்கு தோள் கொடுத்தது போதும் என்ற எண்ணம் சிவாவுக்கு மட்டுமின்றி மற்ற திமுக–வினருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் தேர்தலில் துணிச்சலாக தனித்து களம்காண சிவா முடிவெடுத்துள்ளார். அதற்கேற்ப காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. கட்சியின் தெற்கு மாநில அமைப்பாளராக இருக்கும் சிவாவின் பொறுப்பில் 11 தொகுதிகள் வருகிறது.
இதில் உருளையான்பேட்டை தொகுதியில் வழக்கம்போல சிவா போட்டியிடுவார். மற்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காணும் பணி தொடங்கிவிட்டது. அதன்படி, உப்பளத்தில் கென்னடி, முதலியார்பேட்டையில் வழக்கறிஞர் சம்பத், அரியாங்குப்பத்தில் சக்திவேல், மங்கலத்தில் சன் குமரவேல், நெட்டப்பாக்கத்தில் டாக்டர் குமரவேல், மணவெளியில் டாக்டர் முத்துக்குமார் என ஆறு பேர் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது. எனினும் இந்தத் தொகுதிகளில் மட்டுமின்றி, மற்ற தொகுதிகளும் தட்டாஞ்சாவடி ஃபார்முலாப்படி, வெயிட்டான வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.
சிவா வசம் உள்ள 11 தொகுதிகளில், 7 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக சிவா உருவெடுப்பார். இதற்கு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் பரிபூரண ஆதரவு தேவை என்பதை கட்சியினர் உணர்ந்திருக்கிறார்கள். ஏனெனில், புதுச்சேரிக்கு அருகிலுள்ள வழுதாவூரை பூர்வீகமாகக் கொண்ட ஜெகத்ரட்சகனுக்கு, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள வன்னியர் சமூக மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இது தேர்தலில் கைகொடுக்கும் என சிவா நம்புகிறார்.
குறைந்தபட்சம் ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், இந்த முறை அமையும் ஆட்சியில் சிவாவுக்கான அங்கீகாரம் உறுதியாகும். அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் போன்ற முக்கிய பதவிகளில் ஏதாவது ஒன்று சிவாவுக்கு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதற்கேற்பவே சிவாவின் நடவடிக்கையும் உள்ளது. கால் நூற்றாண்டு கால அரசியலுக்கு சொந்தக்காரரான சிவாவுக்கு, வரும் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.