புதுச்சேரியில், அந்த 8 பேரில், யார் அடுத்த முதலமைச்சர்? மக்கள் கருத்தை பிரதிபலிக்கும் ‘வேல்ஸ் மீடியா’

0
169

புதுச்சேரியில் முக்கிய தலைவர்கள் 8 பேருக்கு முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை வந்துவிட்டது. இதற்கான வேலைகளை அவர்கள் இப்போதே தொடங்கிவிட்டதால், புதுச்சேரி அரசியல் களம் விறுவிறுப்படைய தொடங்கிவிட்டது

புதுச்சேரியில் அடுத்த முதலமைச்சராக யாருக்கு வாய்ப்பு என்பதுதான் இப்போது ஹாட் டாபிக். தற்போதைய முதலைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமசிவாயம், முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.. ஜான்குமார், முன்னாள் அமைச்சர் ப. கண்ணன், தொழிலதிபரும், மாநில மக்கள் நீதி மய்யம் தலைவருமான எம்.. சுப்பிரமணியம், மாநில பா... தலைவர் சாமிநாதன் ஆகிய எட்டு பேரும் முதலமைச்சராகிவிட வேண்டும் என்ற ஆசையுடன், அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டனர்.

முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அமைச்சராக இருந்துகொண்டு தேசிய அரசியல் செய்து வந்த நாராயணசாமி, திடீர் முதலமைச்சர் ஆனவர். 2014 எம்.பி. தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், மாநில அரசியல் மீது அவருக்கு ஆசை வந்தது. 2016 மே மாதம் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்திமுக கூட்டணி வெற்றி பெற, அனைவரையும் ஓரந்தள்ளிவிட்டு முதலமைச்சர் நாற்காலியை பிடித்தார். ஆனால், ஆளுநர் கிரண்பேடிக்கும், நாரயணசாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இதையும் சாதகமாக்கிக் கொள்ளும் நாராயணசாமி, தனது அரசு எதுவும் செய்ய முடியாததற்கு கிரண்பேடியே காரணம் என பந்தை அந்தப் பக்கம் தள்ளிவிடுகிறார். ஆனால், மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை. பொதுமக்கள், அரசு ஊழியர்களின் அதிருப்தியால் நாராயணசாமியின் முதலமைச்சர் நாற்காலி கலகலத்துவிட்டது.

முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

எளிமையானவர் என்றாலும், 2011-2016-ல் இவரது ஆட்சியிலும் மக்களுக்கு அதிருப்தி இருந்தது. மக்கள் நலத்திட்டங்களை செய்யாததே இதற்குக் காரணம். எனவேதான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.  அதே ஃபார்முலாவைத்தான் ரங்கசாமி இப்போது கையிலெடுக்கிறார். நாராயணசாமி அரசு மீதான மக்களின் அதிருப்திதான் அவருக்கு முக்கிய மூலதனம். அதிருப்தி வாக்குகளை NR காங்கிரஸ் முழுமையாக அறுவடை செய்துவிட வேண்டும் என அவர் திட்டமிடுகிறார். ஆனால், மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் இவரது முதலமைச்சர் கனவு சுலபமாக இருக்காது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமையும்பட்சத்தில் முதலமைச்சர் ரேஸில் முன்னணியில் இருப்பது ரங்கசாமிதான்.

அமைச்சர் நமசிவாயம்

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த இவரை முன்னிறுத்தித்தான் 2016-ல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் இவர்தான் முதலமைச்சர் என ஆதரவாளர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் திடமாகவே நம்பினார்கள். ஆனால், கட்சி மேலிடத்தில் இருந்த செல்வாக்கால், நாராயணசாமி இவரை ஓரங்கட்டிவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் நமசிவாயம், வரும் தேர்தலில் எப்படியும் விட்டதை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக களப்பணியாற்ற தொடங்கிவிட்டார். ஆனாலும், ஆட்சி மீதான அதிருப்தி இவரது ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கும். ஆசை கைகூட வாய்ப்பு மிக மிகக் குறைவு.

முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் என நீள்கிறது இவரது அரசியல் பயணம். சபாநாயகர், எம்.பி. ஆகிய பதவிகளை வகித்துள்ள ராதாகிருஷ்ணன் ரொம்ப நல்லவர் என பெயரெடுத்தவர். நல்லவராக இருந்தாலும், எங்களுக்கு எதையும் செய்யவில்லையே என தொகுதி மக்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். இவர் போடும் அரசியல் கணக்கு பலே ரகமாக இருக்கிறது. மூன்றாவது அணி அமைத்து அதன் மூலம் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அது. அப்படியே மூன்றாவது அணி அமைந்தாலும் ராதாகிருஷ்ணனால் முதலமைச்சர் நாற்காலியில் அமரவே முடியாது என்கின்றனர் முக்கிய கட்சிகளில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள். ஆனால், அதிர்ஷ்டம் கூடிய அரசியல்வாதி என்ற ரீதியில், ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு சரியானால், இவருக்கு யோகம் அடிக்கக்கூடும்.

எம்.எல்.. ஜான்குமார்

புதுச்சேரியின் காஸ்ட்லியான அரசியல்வாதி. கிங் மேக்கர். நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவரது தயவால்தான் நாராயணசாமி முதலமைச்சராக இருக்கிறார். நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், நெல்லித்தோப்பில் அவரை வெற்றி பெறவும் வைத்தார்.  பின்னர் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் கலையை நன்கு அறிந்தவர் என்பதால், எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது. அதேபோல், தொகுதி மக்களிடையேயும் பெருமளவு அதிருப்தியை சம்பாதிக்காமல் இருக்கிறார். கட்சியில் அதிருப்தியில் இருக்கும் இவரிடம், மூன்று இடங்கள் வரை தருவதாக என்.ஆர். காங்கிரஸ் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதேநேரம், பாரதிய ஜனதா கட்சியும் இவர் மீது கண் வைத்துள்ளது. அதாவது, ஜான்குமாரை முன்னிறுத்தி பா.ஜ.க. சார்பில் மூன்றாவது அணி அமைத்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள நபர்களை தூக்குவது என்பதுதான் பா.ஜ.க. தேசியத் தலைமையின் திட்டம். இது செயல்வடிவம் பெற்றால், தேர்தலில் மூன்றாவது அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளும், ஜான் குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் ப. கண்ணன்

புதுவை அரசியலில் மிக முக்கிய சக்தியாக திகழ்ந்தவர். புதுச்சேரி அரசியல் வரலாற்றில் தனக்கென ஆதரவு எம்.எல்..க்களை உருவாக்கியவர். பல கட்சிகள் மாறிய அவர், புதிய கட்சிகளையும் ஆரம்பித்தார். சபாநாயகர், அமைச்சர், மாநிலங்களவை எம்.பி. என முக்கிய பதவிகளை வகித்தவர். புதுதச்சேரியில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கித்தந்த பெருமை தனக்கு உண்டு என அவர் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால், தற்போதோ, மக்கள் அவரை மறந்துவிட்டாலும், அவருக்கு இன்னும் பதவி ஆசை இருக்கத்தான் செய்கிறது. மாநில அரசியலில் சக்திமிக்கவராக திகழ்ந்த அவருக்கு, அந்த ஆசை வருவதில் தவறில்லை, அது கைகூடத்தான் வாய்ப்பில்லை.

தொழிலபதிர், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன்

தற்போது, மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரா இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் பயணித்தவர். உருளையான் பேட்டை, முதலியார் பேட்டை, அரியாங்குப்பம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் களம் கண்டவர். தனது அரசியல் அனுவம் மூலம் 16 தொகுதிகளை குறிவைத்து இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ஒன்றிரண்டு தொகுதிகளில் தோற்றாலும், மற்றவர்களின் ஆதரவைப் பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது அவரது கனவு. அது பகல் கனவாக இருக்கும்போது மக்களை குறை சொல்ல முடியாது.

இவர்கள் 7 பேரும் நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம், அனுவபம் கொண்டவர்கள். ஆனால், பா.ஜ.க. மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கும் முதலமைச்சர் பதவி மீது ஆசை வந்திருப்பதைத்தான் மக்கள் புன்முறுவலோடு கடந்து செல்கிறார்கள். சாமிநாதனைப் பொறுத்தவரை, மேலிட வழிகாட்டுதல்படி, கிரண்பேடி தயவால் எம்.எல்.ஏ. ஆனது போல, கட்சி எப்படியும் தம்மை முதமைலச்சராக்கிவிடும் என நம்புகிறார். மாநிலத்தில் கட்சியை வளர்க்காமல், முக்கியப் பிரமுகர்களை கட்சியில் இணைக்காமல், முதலமைச்சர் பதவியா என கட்சிக்குள்ளேயே நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள். பா.ஜ.க.வின் மூன்றாவது அணி திட்டத்தில் சாமிநாதன் இருப்பாரா என்பதே சந்தேகம்தான்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை பெற 16 இடங்கள் தேவை. அதில் 8 பேர் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இவர்களில் ரங்கசாமி, ராதாகிருஷ்ணன், ஜான்குமார் ஆகியோருக்கிடையேதான் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.