#NEP2020! எங்க பிள்ளைங்க மக்குகளா? திராவிட  வர்ணாசிரமம் வேண்டாம்! ஸ்டாலினுக்கான சாமானியனின் கேள்விகள் – பாகம்-2

0
30

1989 முதல் 2014 வரை, மத்தியில், மதயானை போன்று வலம் வந்த திமுக, கல்விக்காக செய்தது என்ன? எங்கள் வீட்டு பிள்ளைகள் எதற்குமே தகுதியில்லாதவர்கள் என்ற ரீதியில், எங்களுக்காக வக்காலத்து வாங்குவது போல அரசியல் செய்வது சரிதானா? என திமுக தலைவர் மு.. ஸ்டாலினுக்கு சாமானியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சற்று பெரிய பதிவுதான், முழுமையாக படிக்கும்போது நியாயம் புரியும்.

வணக்கம் திரு. மு.. ஸ்டாலின் அவர்களே!

1. 1976 ஆம் ஆண்டு அவசர நிலையின்போது, கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது, சமூகநீதி, சமத்துவத்தை காக்க, கல்வி, மாநிலப்பட்டியலுக்கு வருவது அவசியம் என்று உங்கள் தந்தை கருணாநிதி உறுதியாக நம்பியதாக கூறுகிறீர். அப்படியானால், 1989 முதல் 2014 வரை, மத்திய ஆட்சியை ,விரல் நுனியில் ஆட்டுவித்த போது, இதைச் செய்யாதது ஏன்? அந்த கால் நூற்றாண்டு காலம், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது மறந்து போயிற்றா? அந்த கால் நூற்றாண்டு காலம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை உங்கள் கட்சியால் காப்பாற்றப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

2. தேசிய கல்விக்கொள்கை எந்த அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்பதை அரசியல் கலக்காமல், நேர்மையாக விளக்கினால் நாங்களும் தெரிந்துகொள்வோம். இந்த கல்விக்கொள்கையில், கல்வியின் தரம், இதுவரை அடைந்த முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பது உங்கள் புகார். அப்படியானால், உங்களைப் பொறுத்தவரை, பாடம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல், மனப்பாடம் செய்து, 35மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும்  கல்வி முறையே சிறந்தது. பாடத்தை புரியும்படி பயிற்றுவிப்பது, மாணவர்கள் பாடத்தை புரிந்து தேர்வெழுதுவது போன்றவை தவறா? வெறும் தேர்ச்சி என்ற அடிப்படையில், எத்தனை பட்டதாரிகள் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாணவர்களை ப்ரீ கே.ஜி. முதற்கொண்டே நேர்த்தியாக பயிற்றுவித்து உரிய செயல்முறைகளை, ஆராய்ச்சிகளை சொல்லிக்கொடுத்து அவர்களை முழுமையான மாணவனாக பள்ளி, கல்லூரிகளில் இருந்து அனுப்பது தவறு என்று எந்த அடிப்படையில் தாங்கள் கூறுகிறீர்கள்?

Also Read: https://velsmedia.com/the-common-mans-questions-to-mk-stalin-about-the-new-education-policy/ (Part-1)

3. கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு வைத்தால், பயிற்சி வகுப்புகளில் சேர முடியாத மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ரொம்ப அக்கறையோடு கேட்கிறீர்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் முட்டாள்களாகவே இருப்பார்கள் என்று எந்த விதத்தில் நீங்கள் கருதுகிறீர்கள் என புரியவில்லை? பள்ளி, கல்லூரிகளில் அவர்களை முழுமையான மாணவர்களாக்கி வெளியே அனுப்பும்போது, எதற்காக பயிற்சி மையங்கள்? கல்லூரிகளில் இடைநிற்றலை குறைக்க இந்த கல்விக் கொள்கையில் ஆவன செய்யப்பட்டுள்ளதே? முதலாம் ஆண்டு முடித்தவுடன் ஒரு சான்றிதழ், இரண்டாம் ஆண்டு முடித்தவுடன் மேம்பட்ட டிப்ளமோ சான்றிதழ், மூன்றாம் ஆண்டு முடித்தவுடன் இளநிலைப் பட்டம், நான்காம் ஆண்டில் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ். இதில் என்ன நீங்கள் தவறு கண்டீர்கள்?

4. கல்வியில் பெண்கள் எந்தவிதத்தில் குறைந்துவிட்டார்கள்? தற்போதைய பெண்கள், பெரியார், அண்ணா காலத்து பெண்கள் அல்ல. அவர்களால், எத்தகைய பயிற்சிகளையும், தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும். அவர்களால், முடியாது என பொதுவெளியில் கூறுவதுதான், அவர்களுக்கு உளவியால் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை என்று கூறுகிறீர், தற்போதைய இட ஒதுக்கீடு தொடரும் என்ற நிலையில், எதற்காக குறிப்பிட வேண்டும்?

5. தமிழ்நாட்டில் 60% மாணவர்கள் கிராமப்புறத்தில் இருக்கும்போது, தொழில்நுட்ப உதவியுடனான கற்றல் முறையை இந்த கல்விக்கொள்கை ஊக்குவிப்பது தவறு என்பது உங்கள் வாதம். தயை கூர்ந்து கிராமப்புற இளைஞர்களின் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். நகர்ப்புற மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வதை, அவர்கள் படிக்காமலேயே செயல்முறை மூலம் கற்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கி வருவதை தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

6. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் ஒரே ஒழுங்கு முறை அமைப்பின் கீழ் கொண்டு வரக்கூடாது என்பது உங்களது வற்புறுத்தல். லட்சங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு,  தரமற்ற மாணவர்களைச் சேர்ப்பது, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கென்றே தரமற்ற பாடத்திட்டங்களையும், முறையற்ற தேர்வுகளையும் வைப்பது போன்றவையெல்லாம் இதன் மூலம் தடுக்கப்படும் என்பது தங்களுக்கு புரியவில்லையா?

7. கல்வித்துறையை தாராளமயமாக்குவதுடன், கல்வியை வணிகமாக்குவது ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் என்பது உங்கள் கூற்று. மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது, பள்ளி, கல்லூரிகளை தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படவே இல்லையா? உங்கள் மகள் நடத்துவதும் தனியார் பள்ளிதானே? அந்த பள்ளியில் 2011-ம் ஆண்டே 24 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதே, அப்போது இந்த எண்ணம் உங்களுக்கு தோன்றவில்லையா? உங்கள் கட்சியினர், சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை நடத்துகிறார்களா, இல்லையா? கல்வி வணிகமயமாகக் கூடாது, ஏற்றத்தாழ்வு கூடாது என அந்த பள்ளி, கல்லூரிகளை மூடச் சொல்லிவிடுகிறீர்களா?

8. இந்த கல்விக் கொள்கை, தமிழ் மொழிக்கு அநீதி இழைக்கிறது, தமிழக மக்களின் பெருமையை இழிவுபடுத்துகிறது என போகிறபோக்கில் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். அப்படியானால், செம்மொழியாம் தமிழை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் வகையில் கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது தவறு என்கிறீர்களா?

9. சமூக நீதியைக் காக்க உறுதிபூண்ட ஒரு கட்சியின் தலைவர், அனைவருக்கும் சம வாய்ப்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவன் என்று உங்களை நீங்களே வரையறுத்துக்கொண்டுள்ளீர். கல்விக்கொள்கையைத் தாண்டி, இது, அரசியல் ரீதியான கேள்விதான், தவறாக எண்ண வேண்டாம். சமூக நீதி, அனைவருக்கு சம வாய்ப்பு என்றால், பெரம்பலூர் பொதுத் தொகுதி ஆனவுடன், . ராசாவை ஏன் நீலகிரி தொகுதிக்கு அனுப்பினீர்கள். இதுதான் உங்கள் சமூக நீதியா?

10. நாலு சுவற்றுக்குள் பி.எட். கல்லூரி, ஏதாவது ஒரு டிகிரி படித்தால், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர் என்ற ஏமாற்று வேலையெல்லாம் இனி எடுபடாது. ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதி நான்கு ஆண்டு பி.எட். படிப்பு, குறிப்பிட்ட இடைவெளியில் ஆசிரியர்களின் திறனை சோதித்தல் என பல்வேறு அம்சங்கள் கல்விக்கொள்கையில் உள்ளதே, இதெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா?

ஸ்டாவின் அவர்களே, கடைநிலை கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியைக் கொடுப்பதற்காக மத்திய அரசு மெனக்கெடுகிறது.  இதை பாஜக அரசு என்றில்லை, காங்கிரஸ் அரசு கொண்டு வந்தாலும் நாங்கள் ஏற்றிருப்போம். அரசுப் பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை மாற வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று மொழி படிக்கும்போது, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் வீட்டு பிள்ளைகளும் மூன்று மொழி படிக்கட்டும். சமூகநீதி, சமத்துவம், பெரியார், அண்ணா என எதையாவது சொல்லி அதை கெடுத்துவிடாதீர்கள். ஹிந்தி கட்டாயம் இல்லை என சொல்லும் நவோதயா பள்ளிகளைத்தான் உங்களைப்போன்றோர் வரவிடவில்லை, 34 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பிள்ளைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்கப்போகிறது என நினைக்கும்போது, மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.