கர்நாடக, கேரள முதலமைச்சர்களிடம் இருக்கும் மாநில நலன் சார்ந்த சாதுரியத்தில், ஒரு துளி கூட நம் தமிழக முதலமைச்சரிடம் இல்லை என்பது தான் நம்முடைய பிரதானமான வருத்தம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி விவகாரத்தில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொள்ளும் பதவியேற்பு வைபவத்தில், விதான் சவுதாவின் முன்வரிசை விஐபி நம்முடைய தமிழக முதலமைச்சர்தான்.
அதே கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியோடு, நம்முடைய தமிழக முதலமைச்சருக்கு கூடுதல் நெருக்கமும் உண்டு. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் ஒரு வகையில் பகுத்தறிவுவாதி என்கிற அடிப்படையில், நம்முடைய முதலமைச்சரோடு கூடுதல் நெருக்கம் காட்டக் கூடியவர் தான்.
டி.கே. சிவக்குமார் கூட சில விடயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவர் என்றாலும், சித்தராமையா பக்குவமானவர் என்கிற நம்பிக்கை நேற்று வரை எனக்கெல்லாம் இருந்தது. ஆனால் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கர்நாடகத்தின் தென் எல்லையில் நடந்து வரும் இனவெறிப் போராட்டங்களை கர்நாடகா அரசு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
I.N.D.I. கூட்டணியில் மிக முக்கியமான பார்ட்னர் திராவிட முன்னேற்றக் கழகம். அகில இந்திய அளவில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த இடம் திமுகவுக்கு உரியது. I.N.D.I. கூட்டணியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் காங்கிரசிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், காவிரி விவகாரத்தில் துரும்பை கூட கிள்ளிப் போட முடியாமல் தத்தளிப்பதை நம்மால் உணர முடிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான அத்திப்பள்ளிக்கே நேற்று வந்து சண்டியர்த்தனம் செய்துவிட்டு சென்றிருக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கன்னட சலுவாலியா கட்சித் தலைவருமான வாட்டாள் நாகராஜ். மாண்டியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் இரண்டு மூன்று நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் என்கிற போர்வையில் சமூக விரோதிகள் பச்சை துண்டுகளை அணிந்து கொண்டு, பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் அமர்ந்து நடத்திய மறியல் போராட்டங்கள், கண்டிப்பாக காவிரிக்கு எதிரானதாக எங்களுக்குத் தெரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றாக சேர வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை அழைத்துப் பேசும் மல்லிகார்ஜுன கார்கே போன்ற கன்னடர்கள், காவிரி நதிநீர் விவகாரத்தில் ஏன் இதுவரை எங்கள் முதலமைச்சரை அழைத்துப் பேசவில்லை? மாநில நலன் என்று வந்துவிட்டால் மூத்த அரசியல்வாதியான சித்தராமையா தமிழகத்திற்கு எதிராக நிற்பது ஏன்..?
கர்நாடகத்தின் வட எல்லையான பெலகாவியை குறிவைத்து அவ்வப்போது அங்கு போராட்ட குரல் எழுப்பி வரும் மராட்டியர்களுக்கு, I.N.D.I. கூட்டணியில் இருந்தாலும், அன்றும் இன்றும் என்றும் ஆதரவளிக்கும் மன நிலையில் இருக்கிறார் மராட்டியத்தின் சரத்பவார். அந்த சரத்பவாருக்கு இருக்கும் மாநில நலன் சார்ந்த சிந்தனை, ஏன் நம்முடைய தமிழக முதலமைச்சருக்கு இல்லை..?
I.N.D.I. கூட்டணியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுமானால், பல் பிடுங்கப்பட்ட பாம்பு I.N.D.I. கூட்டணி. காவிரி கடைமடையில், காவிரி நீரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கும் அப்பாவி விவசாயிகளுக்கு ஒரு நியாயம் வேண்டுமானால், உடனடியாக I.N.D.I. கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம் என்கிற ஒரு அறிக்கையை நம்முடைய தமிழக முதலமைச்சர் வெளியிட்டாலே போதும்.
இதன் மூலம் தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது, கூடுதலாக காவிரி நீரை மையப்படுத்தி கர்நாடகத்தில் காவிரி கரையோரங்களில் நடந்து வரும் கன்னடத்து சண்டியர்களையும் ஒடுக்கியதற்கான ஒரு வாய்ப்பும் கிடைக்கும். இன்னமும் நட்பு, தத்துவம், இந்திய நலன் என்று நம்முடைய முதலமைச்சர் பிடிவாதம் பிடிப்பாரானால், கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதை நமக்கு 100 விழுக்காடு பொருந்தும்.
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த வேண்டும் என்றால் பேபி அணையை பலப்படுத்த வேண்டும். அதற்குத் தடையாக இருப்பது பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 23 மரங்கள். நவம்பர் 8, 2021ம் தேதி திடீரென பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்ட உத்தரவிட்டதற்காக கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் எழுதிய ஒரு நன்றிக் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ஆச்சரியம் தலை தூக்க அதை நாங்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே, மரங்களை வெட்ட உத்தரவிட்ட கேரளாவின் முதன்மை வனப் பாதுகாவலர் எழுதிய கடிதம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்தார் கேரள வனத்துறை அமைச்சர் எ.கே. சசீந்திரன். தமிழக முதலமைச்சரின் நன்றி கடிதத்தை, கேரள முதலமைச்சர் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கழித்து, அதாவது ஏப்ரல் 9, 2022ல், எந்த கேரளா முதலமைச்சரால் தமிழக முதலமைச்சரின் கடிதம் தூக்கி வீசப்பட்டதோ, அந்த முதலமைச்சர் தலைமையில், கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ண்டார் நமது தமிழக முதலமைச்சர்.
‘எண்ட பேரு ஸ்டாலின்’ என்று தொடங்கிய நம்முடைய முதலமைச்சரின் உரை, ஒட்டுமொத்த கேரளாவின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் தவறியும்கூட பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 23 மரங்களைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேரள முதலமைச்சரிடம், நமது தமிழக முதலமைச்சர் பேசவில்லை.” இவ்வாறு அறிக்கையில் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry