தயிர் சூடு என நம்பப்படும் நிலையில், தயிர் சாதம் குறித்து சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்த உணவு குளிர்ச்சியானது, இது சூட்டைக் கிளப்பக்கூடியது என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல. அந்த வகையில் தயிர்சாதம் வெயிலுக்கேற்ற மிகச் சிறந்த உணவு என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கோடையில் வெளிப்புறச் சூழல் வெப்பமானதாக இருப்பதால், ஹெவியான உணவுகளைச் சாப்பிட்டால் செரிமானம் சிரமமாகும். அதனால்தான் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக் உள்ள தயிர் உணவுகளை வெயிலில் அதிகம் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறோம். தயிர்சாதத்தில் திராட்சை, மாதுளை முத்துகள் என பழங்கள் சேர்த்தும் சாப்பிடலாம். தயிர்சாதம் நல்லது என்பதற்காக மூன்று வேளைகளும் நிறைய சாதம் வைத்து, கெட்டித்தயிர் விட்டுச் சாப்பிடுவதும் சரியல்ல.
நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் எல்லோரும் அரிசி சாதத்தின் அளவைக் குறைக்க வேண்டியது முக்கியம். அந்த வகையில் அவர்களெல்லாம் அளவுக்கதிகமாக தயிர்சாதம் சாப்பிடுவது சரியல்ல. இட்லி, இடியாப்பம், தயிர்சாதம் போன்ற மிதமான உணவுகளை நோயாளிகளுக்குக்கூட கொடுக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளோர், பாலைக் காய்ச்சி, அதிலுள்ள ஆடையை அகற்றிவிட்டு தயிராக்கி, பிறகு நிறைய தண்ணீர் சேர்த்து நீர்மோராக்கி எடுத்துக்கொள்ளலாம். தயிரில் உள்ள கொழுப்புதான் பிரச்னையே தவிர, தயிர் அல்ல.
வெயில் காலத்தில் உடலில் நீர்வறட்சி ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். 40 ப்ளஸ் வயதில் உள்ளவர்கள், வெயிலில் அலைவதைத் தவிர்ப்பது மிக அவசியம். வெயிலில் அலைவது மட்டுமன்றி, வீட்டுக்குள் இருந்தாலும் ஹெவியான உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம். காரம், எண்ணெய், மசாலா அதிகமுள்ள உணவுகள் வேண்டாம்.
வெயில் காலத்தில் உடல் எடை நன்றாகக் குறைவதை உணரலாம். அந்த நாள்களில் அதிகம் பசிக்காது. வெயிலுக்கு இதமாக நிறைய திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதையே விரும்புவோம். புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் கோடைக்கு மிகச் சிறந்தவை. அந்த வகையில் கூழ் வகைகள் அற்புதமான உணவுகளாக அமையும். வெயிலில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் சில நிமிடங்கள் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ் வாட்டர் குடிக்காமல் இயல்பான குளிர்ச்சியில் உள்ள தண்ணீரையே குடிக்க வேண்டும். நிறைய நீர்மோர் குடிப்பது சிறந்தது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி : டாக்டர் விகடன்
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry