மோசடிப் புகாரில் தனியார் நிதி நிறுவனம்! 21 இடங்களில் அதிரடி ரெய்டு! உரிமையாளர் வீட்டுக்கு சீல்!

0
395

வேலூரைத் தலைமையிடமாக கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்(IFS) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். 15 தினங்களாக இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால் இதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன்

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் பல நூறு கோடி ரூபாயை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது. அவ்வாறு வசூல் செய்யும் நபர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு இரண்டு சதவீத வட்டிக்கு கடன் வாங்குவதாக அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம் தருவதாகக் கூறி, முகவர்கள் மூலமாக சென்னை மும்பை டெல்லி மற்றும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகள் மூலமாகவும், பங்குச்சந்தை முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவன முகவர்கள் மூலமாகவும் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

வசூல் செய்த பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும், அந்த லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்கு தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளனர். பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்தும் இந்நிறுவனம் முதலீடு செய்தவர்களிடம் பணத்தை வசூல் செய்தது.

நெருங்கிய நண்பர்களுக்கு முதலீட்டுத் தொகையில் 8% வட்டியாக கிடைக்கும் என்றும், மற்றவர்களுக்கு ஆறு சதவீதம் வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி முகவர்கள் மூலம் மூளைச்சலவை செய்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 8000 ரூபாய் கிடைத்ததை அடுத்து பலரும் அதிகப்படியான தொகையை முதலீடு செய்தனர்.

பெரும்பாலும் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பு மக்களிடமிருந்தும் இந்நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்றதாக கூறப்படுகிறது.

Also Read : 2, 3 பணக்காரர்களுக்காக சர்வாதிகார ஆட்சி! கண் முன்னே இந்தியா அழிகிறது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இந்த நிலையில் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில், நிதி நிறுவனம் நேரடியாக பணம் வசூலிக்காமல், முகவர்கள் மூலம் அவர்களது வங்கி கணக்கில் மூலம் பண பரிமாற்றம் செய்து வந்ததால், பாதிக்கப்பட்டவர்களால் நிதி நிறுவனத்தின் மீது நேரடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியவில்லை.

இந்தச் சூழலில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்தார். கார்த்திக் மட்டும் 56 லட்சம் ரூபாய், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கார்த்திக் கூறியதன் பேரில் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து 18 கோடி ரூபாய் வரை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் நிதி நிறுவனம் கூறியபடி வட்டி பணத்தைக் கொடுக்கவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. அது குறித்து காவல் நிலையங்களில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வரும் திங்கள்கிழமைக்குள் (8.8.2022) சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு நேற்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து தமிழக முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்கு தொடர்பான 21 இடங்களில் இன்று காலை முதல் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள தாமரை டெக் பார்க் கட்டிடத்தில் செயல்படும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வேலூர் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம் மற்றும் வி.ஜி.ராவ் நகரில் உள்ள உரிமையாளர் லட்சுமி நாராயணன் வீடு, அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் பங்குதாரர்களான ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், அரக்கோணத்தில் உள்ள இவர்களது சகோதரர் மோகன் பாபு, வேலூர் செங்காநத்தத்தில் உள்ள முகவர் சுகுமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து வேலூர் காட்பாடி அடுத்த விஜி ராவ் நகரில் உள்ள ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான லட்சுமி நாராயணன் வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்த்துறை உதவியுடன் சீல் வைத்தனர்.

Also Read : அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை முயற்சி!

முன்னதாக பணத்தை முதலீடு செய்தவர்கள் புகார் அளிப்பதை தடுப்பதற்காக வாட்ஸ்அப் குழு அமைத்து பலருக்கும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் அண்ட் சர்வீஸ் உரிமையாளர் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ரெய்டின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம், தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் சமீபத்தில் 1லட்சம் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் வட்டி தருவதாக ஆருத்ரா நிறுவனம் 1400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry