அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை முயற்சி!

0
251

கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதும் திறன் மிக மோசமாக உள்ளது. சமீபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில், 90 சதவீதத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத் தொடர்புத் திறன் இல்லை என்று தெரியவந்துள்ளது.

ஆங்கில அறிவைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே தன் நம்பிக்கையின்மை மற்றும் ஆங்கில இலக்கணத்தின் அடிப்படை தெரியாதது ஆகியவையே பிரச்சனையாக உள்ளது. எனவே இவர்களால் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை.

Representative Image

இதைக் களையும் விதமாக, முதன்முறையாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த 30 கோடி செலவில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இது ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான தொடர்பை ஊக்குவிப்பதுடன், மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவும்.

முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி 6,029 அரசுப் பள்ளிகளில் ஆங்கில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது, இதன் மூலம் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

ஒவ்வொரு ஆங்கில ஆய்வகத்திலும் கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்ட செயல்முறைகளை கற்பிக்கும் வகையில் பொறுப்பான நிபுணர் ஒருவர் பணியமர்த்தப்பட உள்ளார். ஆய்வகத்தில், டிவி, ஓவர்ஹெட் புரொஜெக்டர்கள், கம்ப்யூட்டர், ஸ்கிரீன், மைக்ரோஃபோன் மற்றும் ஹெட்ஃபோன்கள் என நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கும். இதன் மூலம் மாணவர்களிடையே ஆங்கில உச்சரிப்பு, பேசும் திறன் மற்றும் சொற்களஞ்சியத்தை மேம்படுத்தலாம்.

Also Read : மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம்! முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய ஐகோர்ட்!

ஆங்கில ஆய்வகங்கள் மாணவர்களிடையே இறுக்கமானதொரு சூழலை ஏற்படுத்தாமல், கற்றலை வேடிக்கையானதாக மாற்றும் வகையில் இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆடியோ – வீடியோ அமர்வுகள் மூலம் மாணவர்களுக்கு திறன் மேம்படுத்துதல் மட்டுமின்றி ஆங்கில பாடங்களும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. 4-5 மாதங்களுக்குள் ஆங்கில ஆய்வகங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளன. அடுத்த கட்டமாக, இந்தத் திட்டம் நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

With inputs DT NEXT

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry