கஞ்சா விற்பனை கனஜோர்! ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் அரசு கைகோர்ப்பு? ஊழல் செய்வதிலே முதன்மை!

0
333

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலே, எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார். அதுதான் அவர்கள் இந்த ஓராண்டு காலத்தில் செய்துள்ள சாதனை.

இந்தியாவிலேயே முதன்மை முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொள்கிறார். எதிலே முதன்மை… ஊழல் செய்வதிலே முதன்மை. அதோடு லஞ்ச லாவண்யம் பெறுவதில் தமிழகத்தை ஆளும் திமுக முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. எது கிடைக்கிறதோ, இல்லையோ தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை சர்வசாதரணமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் சாதனை படைத்திருக்கின்றனர்.

தமிழக காவல்துறை டிஜிபி, இந்த கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற அறிவிப்பை வெளியிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் கடந்த ஓராண்டில் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் கிலோ, இவ்வளவு கஞ்சாவை தமிழகத்தில் விற்பனை செய்து கொண்டுள்ளனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கையே சீரழியக் கூடிய நிலையை நாம் பார்க்கிறோம். காவல்துறை மானியக் கோரிக்கையின்போது கொள்கை விளக்கக் குறிப்பில், சுமார் 2200 வழக்குகள் கஞ்சா விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 148 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2200 வழக்குகள் பதிவு செய்திருந்தால், அனைவரையும் கைது செய்திருக்க வேண்டும். கைது செய்யாததற்கு என்ன காரணம், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் தலையிட்டு கஞ்சா விற்பனை நடைபெறுவதால்தான், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டால், இந்த கஞ்சா விற்பனையை தடை செய்யலாம். இளைஞர்கள் மாணவர்களை காப்பாற்றலாம்.

கஞ்சா அதிகளவில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் ஆன்லைன் ரம்மி சூதாட்டம். நானும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அறிக்கை வெளியிட்டோம். இதுகுறித்து சட்டமன்றத்திலும் பேசினேன்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விலை மதிக்கமுடியாத உயிர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக முதல்வர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு தனி சட்டத்தைக் கொண்டு வந்து இதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன், ஆனால் முதல்வர் செய்யவில்லை.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக வரும் சில நடிகர்களின் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்துவிட வேண்டாம். முதலில் பணம் தருவதுபோல் சூழ்ச்சி செய்து பின்னர் எல்லா பணத்தையும் கறந்துவிடுவார்கள். இதனால் குடும்பம் சீரழிந்து விடுவதோடு, உயிரிழக்கவும் நேரிடும் என்று இன்று காவல்துறை டிஜிபி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. ஆனால், இந்த அரசாங்கம் தூங்குகிறது. இளைஞர்களையும், மாணவர்களையும் காப்பாற்ற தவறிவிட்டது.இதனால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் கூட்டுவைத்து அரசாங்கம் செயல்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுகிறது” என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry