அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்வதாகவும், அந்த சூழ்ச்சியை முறியடிப்போம் என்றும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அவர், “பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கட்சியை பலவீனமாக்க சிலர் முயல்கின்றனர். அதனை முறியடிப்போம். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன். அதிமுக பலம் பொருந்திய கட்சியாக இருக்கும். அதற்கு ஐடி-விங்க் பங்கு மிக முக்கியம். அதை முறையாக செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்“ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
#அதிமுக -வை யார் அழிக்க நினைத்தாலும் அது முடியாது, நானே முன்னின்று காத்து நிற்பேன் என #எடப்பாடியார் சூளுரை. @EPSTamilNadu @AIADMKOfficial @sansbarrier pic.twitter.com/MoblUjwwbl
— VELS MEDIA (@VelsMedia) June 21, 2022
அதிமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை மறுதினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்ததால் பரபரப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதிசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி 23ந் தேதி நடத்த வேண்டும் என 2300க்கும் அதிகாமன பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். பொதுக்குழுவை நடத்த வேண்டும் எனவும், அதில் தவறாமல் கலந்து கொள்வோம் எனவும் உறுதி அளித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு மாவட்டசெயலாளர்கள் மூலம் கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry