சர்வதேச யோகா தினம்! மக்களை யோகா ஒன்றிணைப்பதாக பிரதமர் பெருமிதம்!

0
263

8வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னட்டு நாட்டின் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு நாடுகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

‘மனித நேயத்திற்காக யோகா'(Yoga for humanity) என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மைசூருவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமருடன் 15 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சர்பானந்த்த சோனோவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யோகா பயிற்சிக்கு முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நல்ல உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் யோகா வழிகாட்டுகிறது. நாள்தோறும் யோகா செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். உலக நாடுகளையும், மக்களையும் யோகா ஒன்றிணைக்கிறது. கோவிட் காலத்தில் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிகாட்டியது. உலகின் அனைத்து பகுதிகளையும் யோகா சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் மனித நேயத்திற்கான யோகா. இந்த நாளில், ஐ.நா., மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 17000 அடி உயரத்தில் பனிபடர்ந்த மலைப்பகுதியில் யோகாசனங்களை செய்து கொண்டாடினர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். டெல்லி லோட்டஸ் டெம்பிள் வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ராஜ்பவன் வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். தமிழகத்தில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry