தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு! வேதாந்தா நிறுவனம் திடீர் முடிவு!

0
151

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடையை நீட்டித்தும், ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம், வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில் ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால், ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தது. இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

20/06/22 – தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ள விளம்பரம்

தாமிர உருக்கு வளாகம், சல்பரிக் அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் விற்பனைக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

அரசு உத்தரவால் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில், தொழிற்சாலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி யூனிட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டுக்கு 1.2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்டுள்ளதால், உள்நாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. இதனால் தாமிரத்தின் விலை அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விற்கப்படுவதன் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். 400க்கும் அதிகமான சிறு, குறு தொழில் முனைவோரும் பாதிக்கப்படுவர். இந்தியாவின் தாமிர உற்பத்தியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பங்கு 40 சதவிகிதிமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry