தமிழகத்தில் பல முதல்வர்கள் உள்ளனர்! திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ்! ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

0
212

திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை வானகரத்தில் நடைபெற்றது. இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் மட்டும்தான் திமுக அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் திமுக அரசு வீட்டு வரி உயர்த்தியுள்ளது. விரைவில் பஸ் கட்டணம், மின் கட்டணம் உயர உள்ளது. ஊழலில்தான் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. போதைப்பொருள் கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது, பல முதல்வர்கள் உள்ளார்கள்.

ஒற்றைத் தலைமை பிரச்சினை தொடர்பாக மூத்த தலைவர்கள் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை பலமுறை சந்தித்து பேசினார்கள். ஆனால், அவர் அனுமதி தரவில்லை. பல முறை பேசியும் அவர் செவிசாய்க்கவில்லை. அவர் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம். ஓபிஎஸ் எப்போது ஜெயலலிதாவிற்கு விசுவசமாக இருந்தார்? ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு முதன்மை ஏஜென்டாக இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

இத்தனை ஆண்டு காலம் அதிமுகவிற்கு விசுவசமாக இருந்து என்னால் முடிந்த நன்மைகளை செய்து இருக்கிறேன். உங்களின் ஒருவராக தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். முதல்வராக இருந்தபோதும் உங்களில் ஒருவராகத்தான் செயல்பட்டேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து உங்களில் ஒருவராக இருந்து செயல்படுவேன்.

பன்னீர்செல்வம் திமுகவுடன் தொடர்பு வைத்துள்ளார். பொதுக்குழு நடத்தக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு சென்றவர், காவல் துறையில் புகார் அளித்தவர். பன்னீர்செல்வம் என்றால் என்றால் சுயநலம். தனக்கு கிடைக்காத பதவி யாருக்கு கிடைக்க கூடாது என்று நினைப்பவர்தான் பன்னீர்செல்வம்.

மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் மகன் திமுக ஆட்சியை புகழ்ந்து பேசினார்.
பொதுக்குழு தொடர்பாக அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. இன்று எடுத்த முடிவுகள் எல்லாம் தலைமைக் கழக நிர்வாகிகள்தான் எடுத்தனர். இன்று காலை நடந்த நிகழ்ச்சியால்தான் அவரை நீக்க வேண்டிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்திற்கு வருவதற்கு பதிலாக தலைமைக் கழகம் செல்கிறார். ரவுடிகளுடன் சென்று ஜெயலலிதா அறையை கடப்பாரை போட்டு உடைத்துள்ளார். ஆவணங்களை தூக்கிச் சென்றுள்ளார். சொந்தக் கட்சி தலைமை அலுவலகத்தை கொள்ளை அடிப்பவர் விசுவாசியா? திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்கள் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது.

மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். என்னை பழைய பழனிசாமி என்று நினைக்க வேண்டாம். எங்ளை அழிக்க நினைத்தவர்கள் அடியோடு அழிந்து போவார்கள். நாங்கள் காவல் நிலையில் புகார் அளித்தும் தலைமைக் கழகத்திற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.

பன்னீர்செல்வம் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் எண்ணம் காற்றோடு கரைந்து போகும். பல சோதனைகளை வென்றுதாதன் 31 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஸ்டாலின் பாதை மாறி சொல்கிறார். கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். வாழ் நாள் முழுவதும் ஆட்சியில் இருப்பதுபோல் ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். நாம் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்து உள்ளோம். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம். எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry