அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்! மேலும் மூவரையும் நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம்!

0
192

கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். இதனால், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் உள்ளே சென்றார். மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பொதுக்குழுவில் நத்தம் விஸ்வநாதன் சிறப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அதில், பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பொருளாளர் ஓபிஎஸ்சின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக மற்றும் அக்கட்சி தலைமையுடன் நட்பு பாராட்டி, சொந்த நலன்களுக்காக ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், கட்சி விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் ஓபிஎஸ்சை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், கட்சியின் அமைப்பு செயலாளரும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.எஸ்.மணியன், ரமணா, சண்முகநாதன் உள்பட பலர் முன்மொழிந்தனர். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry