அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச! வெளிநாடு தப்ப பசில் ராஜபக்ச முயற்சி!

0
255

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்த பொதுமக்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை தீவைத்து எரித்தனர்.

இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் மக்களின் போராட்டம் தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. இருந்தாலும் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட லட்சக்கணக்கான பொதுமக்கள், அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அதிபர் மாளிகையில் மக்கள் இருப்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், அதிபர் கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை. கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர்.

எனவே, ஜூலை 13-ம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்தார்.
அதன்படி ஜுலை 13 தேதியிட்டு ராஜினாமா கடிதத்தில் கோத்தபய நேற்றே கையெழுத்திட்டுள்ளார். கோத்தபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைவது குறித்து சபாநாயகர் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார்.

இதனிடையே, இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச துபாய் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். இதற்காக நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். பசிலுக்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய் புறப்படவிருந்தது.

Former Minister Basil Rajapaksa – GETTY IMAGE

ஆனால், பசிலை நாட்டை விட்டு வெளியேற அவரை அனுமதிக்கக் கூடாது என்று விமானநிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பசில் ராஜபக்சவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் நடவடிக்கையால் பசில் ராஜபக்ச வீடு திரும்பினார்.

இந்நிலையில் 20-ம் தேதி இலங்கையின் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா தெரிவித்துள்ளார். “தற்போதைய அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலகவுள்ளனர். இதைத் தொடர்ந்து 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார்” என்றார்.

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry