அதிமுக பணமா? திமுக விசுவாசமா? மாறன் சகோதரர்களுக்கு திமுக எம்.பி. சவால்! உதயநிதி கருத்தா என கட்சியினர் குழப்பம்!

0
15

தங்களுக்கு தொழில்தான் முக்கியம், திமுகவிற்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? என்று, மாறன் சகோதரர்களுக்கு, தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டாக்டர் செந்தில்குமார், சர்ச்சைக்கு பெயர்போனவர். தருமபுரியைச் சேர்ந்த இவர், மருத்துவமனை, பள்ளி, பார்மசி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். சாதி மறுப்பு பேசும் செந்தில்குமார், பத்திரிகையாளர்களிடம்,  முன்னாள் எம்.எல்..வான தனது தாத்தா பெயரை குறிப்பிடும்போது வடிவேலு கவுண்டர் என்றார். இது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது.

நடிகர் பார்த்திபன் குறித்த இவரது டிவிட்டர் பதிவு சர்ச்சையானது. தமிழை வைத்தே கட்சி நடத்தும் திமுகவில் இருக்கும் செந்தில்குமார், தமிழைப் பிழையின்றி எழுதத் தெரியாது என கூறியது விமர்சிக்கப்பட்டது. அரசியல் விஷயங்களில் பரபரப்பான கருத்துகளை தெரிவித்துவிட்டு பின்னர் பின்வாங்குவதும் இவரது வாடிக்கை.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசை பாரட்டும் விளம்பர வீடியோ சன் டிவி-யில்  ஒளிபரப்பப்படுகிறது.  பொதுவாகவே, தொழில்வேறு, அரசியல் வேறு என்பதில் மாறன் சகோதரர்கள் தெளிவாக இருப்பார்கள்.

ஆனால், சன் டிவி, அதிமுக அரசுக்கு சாதகமாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என மாறன் சகோதரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில், டாக்டர் செந்தில்குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

செந்தில்குமாரின் இந்தப் பதிவு கட்சியினர் மத்தியில் இருவேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் தயாநிதிமாறன் வாகனம் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தில்தான், மாறன் சகோதரர்கள், அதிமுக அரசு விளம்பரத்தை வாங்கி வெளியிட்டுள்ளனர் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அதேநேரம், தொழில் என்ற பெயரில் கட்சிக்கு எதிராக செயல்படுவதைத் தடுக்கவே, டாக்டர் செந்தில்குமார், மூலம் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெரியப்படுத்தி இருக்கிறார் என்பது மற்றொரு தரப்பினரின் கருத்து. ஏனென்றால், பொதுவெளியின் இவ்வளவு காட்டமாக விமர்சித்தும், ஸ்டாலின் இதனை கண்டிக்காததை கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry