Vijay’s LEO! திரையரங்குகள் கட்டணக்கொள்ளை? சிறப்புக் காட்சிக்கு ஐகோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்!

0
125
Vijay Fans are waiting with bated breath to get their hands on the tickets. 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் பெற்ற வரவேற்பும், ‘விக்ரம்’ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய ‘லோகிவெர்ஸ்’ என்ற விஷயமும்தான் இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு காரணம்.

இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு புக்கிங் திறக்கப்பட்ட சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் திரையரங்கு நிர்வாகங்கள், படத் தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் பதிவுகளையே மிஞ்சும் விதமாக சமூக வலைதளங்களில் அலப்பறை செய்கின்றன.

இது ஒருபுறமிருக்க, ’லியோ’ படத்தின் முதல் காட்சி 4 மணியா அல்லது 7 மணியா என்று குழப்பம் எழுந்த நிலையில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு தெளிப்படுத்தியிருந்தது. அதாவது, அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

Also Read : லியோ டிரெய்லர்! தே…பசங்களா என கொதிக்கும் விஜய்! தெறிக்கும் ரத்தம், விரவிக் கிடக்கும் வன்முறை!

இந்த நிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர முறையீடு செய்தார். காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.  இந்த வழக்கை அவசர வழக்காக நாளை (அக்.16) விசாரிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

இந்தச் சூழலில், கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 14) முதல் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்த சில திரையரங்குகள், சொல்லிவைத்தாற்போல் 9 மணி காட்சியை திறக்கவே இல்லை. மற்ற காட்சிகள் அனைத்தும் வேகமாக நிரம்பிக் கொண்டிருந்த நிலையில், முதல் காட்சிக்கான புக்கிங்கை இப்போது திறப்பார்கள், அப்போது திறப்பார்கள் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னையில் இதுவரை புக்கிங் திறக்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், இன்று (அக்டோபர் 16) வரை 9 மணி காட்சிக்கான புக்கிங் இல்லை. இன்னும், சில திரையரங்குகள் 9 மணிக்கான புக்கிங்கை திறப்பதற்கு முன்பாகவே சீட்டுகள் நிறைந்துவிட்டதாக காட்டின. இதற்கான காரணத்தை விஜய் ரசிகர்களிடம் விசாரித்தபோது, முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘லியோ’ படத்துக்கு திரையரங்குகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக குமுறினர். விநியோகஸ்தர்கள் இயல்பை விட அதிக சதவீத லாபத்தைக் கேட்பதும் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு பேர்போன சில முக்கிய திரையரங்குகள் இன்னும் புக்கிங்கை திறக்காத நிலையில், மிக சுமாரான ஒலி-ஒளி தரம் கொண்ட திரையரங்குகளில் கூட ரூ.1200 முதல் ரூ.1500 வரை டிக்கெட் விற்கப்படுவதாகவும், பெரிய திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.2000 முதல் ரூ.4000 வரை போகலாம் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, கோவையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில், நேற்று ஒரு டிக்கெட் ரூ.450-க்கு விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அதில் டிக்கெட் ரூ.190 ரூபாயா? என்று கேட்கும் ரசிகரிடம், “ரூ.190 கீழ்வரிசைதான் கிடைக்கும். மேல்வரிசை ரூ.450… காம்போவுடன் கவுன்ட்டரில் வாங்கிக்கலாம்” என்று சொல்கிறார் அந்த திரையரங்க ஊழியர்.

Also Read : டீ கூட ரஸ்க் சாப்பிடுவீங்களா? ரஸ்க் சாப்பிடுவதில் உள்ள ரிஸ்க் தெரியுமா? Side Effects Of Eating Rusk With Tea!

அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட கூடுதல் விலை டிக்கெட் விற்கக்கூடாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கையையும் மீறி இப்படி அப்பட்டமான பகல் கொள்ளையில் திரையரங்குகள் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. இப்படி மனம்போன போக்கில் டிக்கெட் விலையை ஏற்ற முடியாது என்பதால் தான் காலை 9 மணி காட்சிக்கான புக்கிங்கை எந்த திரையரங்கும் திறக்கவில்லை என்பது ரசிகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தங்களது ஆதர்ச நடிகரின் படத்தை திரையரங்கில் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகளை தமிழக அரசு கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry