திண்டிவனம் – தி.மலை நெடுஞ்சாலையில் புதிய சுங்கச்சாவடி! செஞ்சி சுற்றுவட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

0
42
Farmers appeal to Tamil Nadu government to stop setting up of new toll plaza at Nattarmangalam in Gingee / Pic. Courtesy - Indhu Tamizh Thisai

திண்டிவனம் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நான்கைந்து மாதங்களில் முடிந்துவிடும் என்று NHAI அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சுங்கச் சாவடிக்கு செஞ்சி சுற்று வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேளாண் சாகுபடி, அதைத் சார்ந்த கால்நடை உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சியை அடிப்டையாக கொண்டதுதான் விழுப்புரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை விவசாயிகளே 90 சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர்.

கரும்பு, நெல், உளுந்து, காய்கனிகள், கரும்பு மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்தச் சாலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதில், கிராம பகுதிகளில் பல இடங்களில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கூடுதல் சுங்கசாவடிகள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி ஏராளமான வேளாண் விளை நிலங்கள், அதையொட்டிய வர்த்தகம் இருந்து வரும் நிலையில், இந்த புதிய சுங்கச் சாவடிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக திண்டிவனம் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்படுகிறது.

Also Read : விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு மூடுவிழா! கணினி ஆய்வகங்களுக்கு கூடுதலாக சில கம்ப்யூட்டர்களை வழங்க அரசு திட்டம்!

புதிய சுங்கச்சாவடிக்கு விவசாயிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யாதவ மக்கள் இயக்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் அருகே சுங்க வரி கட்டண மையம் தொடங்க ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த மையத்தை திறக்கக் கூடாது.

திண்டிவனம்- திருவண்ணாமலை சாலை என்பது இரண்டு வழி சாலையாகவே உள்ளது. இச்சாலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சுங்க வரிக் கட்டணம் வசூல் செய்யும் அளவுக்கு திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த சுங்கச்சாவடி மையத்தை நடைமுறைப்படுத்த விடாமல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். திருவண்ணாமலைக்கு பவுர்ணமிக்கு வரும் பக்தர்களுக்கும், செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும் புதிதாக அமைக்கப்படும் இந்தச் சுங்கச் சாவடி பெரும் சுமையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : ஒரு கம்பெனிக்காக கல்வியைப் பாழ்படுத்துவதா? இனி, எமிஸ் பதிவு செய்யமாட்டோம்! அச்சுறுத்தலை எதிர்கொள்ளத்தயார் என ஐபெட்டோ ஆவேசம்!

தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கடவம்பாக்கம் வி.எம்.மணி இதுபற்றி கூறும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் சுங்கச்சாவடி இல்லாத தேசிய நெடுஞ்சாலையாக திண்டிவனம்- திருவண்ணாமலை சாலை இதுவரை இருந்து வந்தது. இந்தச் சாலை வழியாகத்தான் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் செம்மேடு கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி கொண்டு செல்கின்றனர்.

தற்போது நாட்டார் மங்கலம் அருகே அமைய உள்ள சுங்கச் சாவடியால் விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது கூடுதலாக செலவிட வேண்டிய சூழல் உள்ளது. எனவே, இங்கு சுங்கச்சாவடி அமைய உள்ளதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இதற்குரிய முயற்சிகளை தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் மஸ்தான் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry