
தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத்துறை உரிமம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சென்னையில் தீவுத்திடல் மற்றும் பிற மைதானங்கள் என சுமார் 1500 தற்காலிக கடைகள் அமைத்து ஆண்டுதோறும் பட்டாசு வியாபாரம் செய்யப்படும். இதேபோல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆண்டுதோறும் 5 ஆயிரத்து 500க்கும் அதிகமான தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை நடைபெறும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களே உள்ள நிலையில், பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கேட்டு தீயணைப்பு துறையிடம் விண்ணப்பித்து 2 வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை உரிமம் வழங்கப்படவில்லை என பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். பட்டாசு விற்பனைக்கு நிரந்தரமாக கடை அமைத்தால் தான் உரிமம் கிடைக்கும் என தீயணைப்புத்துறை இயக்குனர் வாய்மொழி உத்தரவாக சொல்வதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Also Read : புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!
தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக தற்காலிகக் கடை அமைக்க, தீயணைப்புத் துறையிடம் உரிமம் பெறுவது 40 ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. தற்காலிகக் கடையானது, 1984 பட்டாசு வெடி விபத்து சட்டத்தின் படி, 10 அடி அகலம், 25 அடி நீள தகரக் கூரையால், 3 மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்படும்.
ஆனால் செங்கல் வைத்து கட்டிடம் கட்டி, நிரந்தரமாக கடை அமைத்தால் தான், பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத் துறை உரிமம் கிடைக்கும் என வியாபாரிகளை நிர்பந்திக்கப்படுவதாக சென்னை பட்டாசு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷேக் அப்துல்லா, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பட்டாசு கடைகள் அமைப்பதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், அதிலும் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களே உள்ள நிலையில், இதுவரையில் ஒரு தற்காலிக பட்டாசு கடைகளுக்குக் கூட தீயணைப்பு துறை உரிமம் வழங்கவில்லை.
தீயணைப்புத் துறையால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனையை தொடங்க முடியவில்லை. இதற்கு மேலும் தாமதமானால், மாநகர காவல்துறையின் அனுமதி, சென்னை மாநகராட்சி அனுமதி பெறுவது மிகவும் சிக்கலாகிவிடும். இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் தீபாவளி பண்டிக்கைக்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொள்முதல் செய்த பட்டாசுகள் தேக்கமடைந்து பெரும் பண இழப்பு ஏற்பட்டு விடும்” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry