நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் மக்களை ஏமாற்றும் வேலை, மக்களவைத் தேர்தல் வருவதால் இப்படிச் செய்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து வருகிறது. திமுக அரசின் சாதனை இதுதான். முதியோர் உதவித்தொகை திட்டத்தையும் நிறுத்தி விட்டார்கள். அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு தற்போது நிபந்தனை விதித்து தான் கொடுக்க முடியும் என்று மு.க ஸ்டாலின் சொல்கிறார்.
இப்போது இன்னொரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டார். எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி எங்கே கொண்டு கொடுக்க போகிறார்? இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் என்ன சொன்னார்கள்? ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர். இப்போது இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஏன் செய்யவில்லை? இதை நம்பி..நம்பி.. பலபேர் உயிர் போனதுதான் மிச்சம்.
இப்போது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குகிறார்களாம். கையெழுத்து வாங்கி எங்கே கொண்டு போய் கொடுத்து, எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஜல்லிகட்டு போராட்டம் என்பது மாநிலப் பிரச்சினை. எனவே இது வேறு, அது வேறு. நீட் தேர்வு என்பது இந்தியா முழுவதும் இருக்கிறது. எல்லா மாநிலமும் நீட் தேர்வை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. அதை மீறி யாரும் செய்ய முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு, லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால் மக்களைப் போய் சந்திக்க வேண்டும், மக்கள் கேள்வி கேட்பார்கள், அதற்கு ஒரு பதில் வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு போலியான நாடகத்தை மக்களை ஏமாற்ற அரங்கேற்றி கொண்டு இருக்கிறார்கள்.
இனி மக்கள் ஏமாறப் போவது இல்லை. திமுக செய்த ஒரு சாதனையை சொல்லுங்கள் பார்க்கலாம். தனது மகனை அமைச்சராக்கியது மட்டும் தான் மு.க ஸ்டாலின் செய்த சாதனை. திமுக ஆட்சியில் மக்கள் கண்ட பலன் இது மட்டும்தான். திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி. எடப்பாடிக்கு தில்..தெம்பு, திராணி இருக்கிறதா என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டார். எல்லாம் இருப்பதால்தான் மக்களை தில்லாக வந்து சந்திக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்கள், அதைச் செய்யுங்கள். உங்களுக்கு வேண்டியது அதிகாரம் மட்டுமே. மக்களை பற்றி கவலை கிடையாது. சிறுபான்மை மக்களை காக்கக் கூடிய அரசாக அதிமுக எப்போதும் இருக்கும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே, ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, 29 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது நாடாளுமன்ற தேர்தல் நாடகம் என சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் விலக்கு தொடர்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ள திமுக அரசின் நிலைப்பாடு குறித்து சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ராயப்பேட்டையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகை அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, 29 மாதங்களுக்குப் பிறகு, தற்போது ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது ஏன்? என அமைச்சர் உதயநிதியும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் விளக்கம் அளிக்க வேண்டும்.
2004 ம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்த போது நீட் தேர்வை அமல்படுத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தாது ஏன்? நீட் தேர்வு என்ற விஷயத்தை தமிழகத்தில் விதைத்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்ததும் காங்கிரஸ்தான், நீட் தேர்வில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்ததும் காங்கிரஸ்தான். தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கைகோர்த்து செயல்படுவது ஏன்? நீட் தேர்வு ரத்து செய்து குறித்து கையெழுத்து இயக்கம் நடத்துவது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையா? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
திமுக அரசின் ஓரவஞ்சனையான, தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தும் கையெழுத்து இயக்க நாடகத்தில் அதிமுக எப்படி பங்கேற்கும்? மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து, நாடாளுமன்றத்தை முடக்கி, சட்டப் போராட்டம் நடத்துவதுதான் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்குமே தவிர, கையெழுத்து இயக்கம் நடத்துவது ஒரு அரசியல் நாடகம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று ஓராண்டு விலக்கு பெற்ற போது, மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், கூட்டணியில் இருந்த திமுகவும் மறுசீராய்வு மனு அளித்து இடையூறு செய்ததை யாராலும் மறக்க முடியாது.
Also Read : சிறுபான்மை மக்கள் அதிமுக-வை ஆதரித்துவிடுவார்களோ என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது! ஈபிஎஸ் விமர்சனம்!
திமுக அரசு நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடவடிக்கை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு அளித்தது, நீட் தேர்வுக்கு எதிராக நிரந்தரப் போராட்டம் நடத்தி வருவதற்கு ஒரு இடைக்கால தீர்வாக அனைவராலும் பார்க்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனை. நீட் எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக என்றும் உறுதியாக உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் தான் இண்டி கூட்டணியில் தொடருவோம் என்று சொல்ல திமுகவால் முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடமோ, ஆம் ஆத்மி கட்சியிடமோ கையொப்பம் பெற்று ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க திமுகவால் முடியுமா? இவ்வாறு சி.விஜயபாஸ்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry