பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 11 மாநில இடைத்தேர்தல் முடிவுகளை, மற்றுமொரு தோல்வி என காங்கிரஸ் கட்சியால் கடந்துவிட முடியாது. பிராண்ட் மோடியை வீழ்த்த முடியாது என்ற காங்கிரஸின் இயலாமையையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.
பீகார் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதை ஒருவரிச் செய்தியாக தள்ளிவிட முடியாது. கொரோனா ஏற்படுத்தி வரும் மிகமோசமான தாக்கத்திற்கு இடையே, இந்தத் தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர், ஹரியானா, தெலங்கானா, குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்பட 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் பாஜக பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளது.
பீகாரில் தேஜஸ்வி யாதவிற்கு இருந்த மிகப்பெரிய வரவேற்பு, அவரின் முதலமைச்சர் கனவு இரண்டையும் காங்கிரஸ் அஸ்தமனமாக்கிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த இடங்களில் தாங்கள் போட்டியிட்டிருந்தால், ஆட்சியைப் பிடித்திருப்போம் என ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் வேறு எங்குமே பாலியல் சம்பவங்கள் நடக்காததைப் போன்று, உத்தரப்பிரதேச இடைத்தேர்தலை மனதில் கொண்டு ஹத்ராஸ் சம்பவத்தை ஊதிப் பெரிதாக்கியது காங்கிரஸ். ராகுல், பிரியங்கா ஆகியோர் கூட்டம் சேர்த்துக்கொண்டு ஹத்ராஸ் சென்றனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்திருக்கிறது.
பீகார் சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல் தோல்வி, கட்சித் தலைமை குறித்த கேள்வியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வரும். ஏற்கனவே 23 தலைவர்கள் காந்தி குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். இதுபற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே எழுதியிருந்தோம். அது சரியே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
Also Read: காங்கிரசில் வெடித்தது கலகம்! காந்தி குடும்பத்துக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி!
காங்கிரஸ் சந்தித்துள்ள இந்தத் தோல்வி மற்றும் தலைமை மீதான அதிருப்தி ஆகியவை, விரைவில் தேர்தலை சந்திக்கவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், அக்கட்சிக்கு 10-15 இடங்களுக்குள்தான் கிடைக்கும். புதுச்சேரியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவே திமுக ஆர்வம் காட்டுகிறது. கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியை தக்க வைக்கலாம் என்றே தெரிகிறது.
இதன் மூலம், மொத்தமுள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறும். இதன்படி பார்த்தால், காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற முழக்கத்தில், பாரதிய ஜனதா கட்சி 90 சதவிகித வெற்றியை பெற்றுவிட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டிய காலகட்டம் இது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழிபோட்டு, பாஜகவின் திட்டமிட்ட உழைப்பை மறுப்பதால்தான் தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறோம் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
மாநிலத்துக்கு ஏற்றார்போல வேஷம்போடாதது பாஜகவுக்கு பலமே எனவும் காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர். பிராண்ட் மோடியால் தாங்கள் வீழ்ச்சியடைவதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இதை ஏற்கனவே கணித்து, நவீன பீஷ்மாச்சாரி என்ற கட்டுரையும் வேல்ஸ் மீடியாவில் வெளியானது.
Also Read: நவீன “பீஷ்மாச்சாரி” மோடியின் மெஸ்மரிசம்! செய்வதறியாது தத்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
காங்கிரஸ் கட்சிக்கு உடனடி தேவை ஆன்ம பரிசோதனைதான். எந்த இடத்தில் சறுக்குகிறோம் என்று இப்போதேனும் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சி குறைகளைக் கண்டறிந்து, கோஷ்டிகளை சமாதானப்படுத்துவதற்குள், மோடி–அமித் ஷா கூட்டணி மேலும் அசுர பலம் பெறும். சர்வதேச அளவில் பிராண்ட் மோடி அசைக்க முடியாததாகிவிடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry