தரவரிசையில் முதலிடம் பிடித்து சுப்மன் கில், சிராஜ் வரலாற்றுச் சாதனை! நெம்பர் – 1 அணியாக மிளிரும் இந்தியா!

0
41
Shubman Gill ends Babar Azam's unchallenged supremacy in ICC ODI Player Rankings / Shubman Gill, Mohammed Siraj / Getty Image

ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) துபாயில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் 2021 ஏப்ரல் 14 முதல் தரவரிசையில் முதலிடம் வகித்து வந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி கில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். கில் 830 புள்ளிகளும், பாபர் 824 புள்ளிகளும் எடுத்து அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த சீசனில் 1,200+ ரன்களை குவித்துள்ள ஷுப்மன் கில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம், இலங்கைக்கு எதிராக எடுத்த 92 ரன்கள் உதவியுடன் மொத்தமாக 219 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அதிகப் புள்ளிகளை பெற்று அவர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில்-ஐ திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும் சச்சின் மகன் சாரா டெண்டுல்கர், கில் முதலிடம் பிடித்துள்ளதை தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிரந்துள்ளார்.

சச்சின், தோனி மற்றும் விராட் கோலிக்கு பின்னர் உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றுள்ளார். டிகாக் 771 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 770 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், டேவிட் வார்னர் 743 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், ரோகித் சர்மா 739 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Virat Kohli / Getty Image

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம், பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மஹராஜும், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் நான்காவது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி பத்தாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

அணிகளுக்கான தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் வரிசையில் நம்பர் ஒன் வீரராக ஜடேஜா உள்ளார். டி20 பேட்ஸ்மின்களுக்கான தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். டி20 பவுலர்கள் பட்டியலில் மட்டும் தான் இந்திய வீரர்கள் நம்பர் ஒன் இடத்தில் இல்லை. மற்ற அனைத்திலுமே இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ஒருநாள், டி20 ஆல்ரவுண்டர் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்திருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry