TANGEDCOன் கோதையார் நீரேற்று புனல் மின் திட்டம்! களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தை பாதிக்கும் என மத்திய அரசு அறிக்கை!

0
26
An Expert Appraisal Committee of the Union environment ministry has deferred a hydroelectric project proposed by Tangedco inside the Kanyakumari wildlife sanctuary and Kalakkad Mundanthurai Tiger Reserve. / Pic : Poovulagu.

தமிழ்நாடு அரசின் கோதையார் நீரேற்று புனல் மின் திட்டம் (Kodayar Pumped Storage Hydro Electric Project of capacity 1500 MW) செயல்படுத்தப்பட்டால், அது களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தையும், கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயத்தையும் பாதிக்கக்கூடும் என மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவால் அமைக்கப்பட்ட துணைக் குழு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையார் நீர்த்தேக்கத்தை மேல் அணையாகவும், பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தைக் கீழ் அணையாகவும் கொண்டு, ரூ. 10,838 கோடி மதிப்பீட்டில் 1500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீரேற்று புனல் மின்திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளைக் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் விண்ணப்பித்திருந்தது. இதனைப் பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, திட்ட அமைவிடமானது கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளுக்குள் இருப்பதால் நேரில் ஆய்வு செய்ய முடிவெடுத்திருந்தது.

“காடுகள், காட்டுயிர்களுக்கு வாழிடமாகவும் உயிருள்ள, உயிரற்ற அனைத்து சூழல் அமைவுகளுக்கும் முக்கியமான ஆதரவாகவும் விளங்குகின்றன. இயற்கைச் சமநிலையைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் சூழல் அமைவின் ஆக்கத்திறனை பாதிக்கிறது. எனவே தமிழ்நாடு மின்வாரியம் இத்திட்டத்தால் பாதிப்படைய வாய்ப்புள்ள சூழல் அமைவுகள், காடுகள், உயிர்ப்பன்மையம், பழங்குடியினர் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மாற்றுத் திட்டங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என நிபுணர் குழு கூறியிருந்தது.

இதனடிப்படையில், டாக்டர். ஏ.கே.மல்ஹோத்ரா, அசோக் குமார் கார்யா, டாக்டர். அந்தோனி ஜான்சன், யோகேந்திர பால் சிங் ஆகியோர் கொண்ட துணைக் குழுவினர் 28.05.2023 முதல் 31.05.2023 திட்ட அமைவிடம் மற்றும் அதன் சுற்று வட்டார காடுகள், காணி பழங்குடியின வசிப்பிடங்கள், பேச்சிப்பாறை அணை, கோதையார் அணை, ரப்பர் தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் துணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு;

  • கோதையார் நீரேற்று புனல் மின் திட்டம் அமையவுள்ள இடம் அதிக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பல்வேறு முக்கியத்துவமிக்க மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரிங்கள் இங்கு வாழ்கின்றன.
  • இத்திட்டப்பகுதி புலிகள், காட்டெருதுகள், யானைகள் மற்றும் ஓரிட வாழ் தாவர இனங்களின் வாழ்விடமாகும் என்று அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
  • இத்திட்டத்தின் முக்கிய கூறுகளான இன்லெட் சுரங்கப்பாதை (inlet tunnel)  மற்றும் பவர் ஹவுஸ் (power house) பூமிக்கடியில் அமையும்படி திட்டமிடப்பட்டுள்ளதால், பல்வேறு சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது காட்டுயிர்களின் வாழ்விடத்தை பாதிக்கும்.
  • எனவே, இந்த விண்ணப்பத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன் தேசிய காட்டுயிர் வாரியத்தின் (NBWL- National Board of Wild Life) நிலைக்குழுவின் கருத்தைப் பெறுவது அவசியம்.
  • இத்திட்டத்திற்கு தேசிய காட்டுயிர் வாரியத்தின் இசைவைப் பெற தமிழ் நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தைக் கோர வேண்டும்.

Also Read : பெரியாறு – வைகைப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்!

நிபுணர் குழுவின் இந்தக் கருத்தை ஏற்ற சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, கோதையார் நீரேற்று புனல் மின் திட்டத்திற்கு தேசிய காட்டுயிர் வாரியத்தின் ஒப்புதலையும், கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் இத்திட்டம் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைதான் என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு மின்வாரியத்திடம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் அமைவிடமானது மிகவும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயப் பகுதிக்குள் வருகிறது. 164.92 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்தத் திட்டத்திற்கு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மேற்பரப்பில் 9.187 ஹெக்டேர், நிலத்துக்கடியில் 2.04 ஹெக்டேர் பகுதியும், கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயத்தின் மேற்பரப்பில் 0.80 ஹெக்டேர், நிலத்துக்கடியில் 7.80 ஹெக்டேர் பகுதியும், அரசு ரப்பர் தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான இடத்தின் மேற்பரப்பில் 133.94 ஹெக்டேர், நிலத்துக்கடியில் 11.16 ஹெக்டேர் பகுதியும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை அமைப்பதற்காக 40 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 15,000 மரங்கள் அகற்றப்படும் எனவும், அதற்குப் பதிலாக 30,000 மரங்கள் நடப்படும் எனவும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிக பாதிப்பு இல்லாத இடத்தை ஆராய்ந்தே தற்போது முடிவான இடம் தேர்வு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Also Read : மத்திய அரசின் கொள்கையினை அடிபிறழாமல் அமல்படுத்துவதா? நிறைவேற்றியதாகச் சொன்ன வாக்குறுதிகள் என்னென்ன? ஐபெட்டோ சரமாரிக் கேள்வி?

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான 47 புனல் மின் நிலையங்கள்(2321.90 மெகாவாட் மொத்த திறன் கொண்ட 107 இயந்திரங்கள்) ஈரோடு, காடம்பாறை, குந்தா மற்றும் திருநெல்வேலி ஆகிய புனல் மின் உற்பத்தி வட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான புனல் மின் நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே அமைந்துள்ளன.

2030ஆம் ஆண்டுக்குள் 500 GW அளவுக்கு புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற மத்திய அரசின் இலக்கிற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியைப் பெருக்க முடிவு செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கோதையார் நீரேற்று புனல் மின் திட்டம் 1 மற்றும் 2 அலகுகள் 40 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள காரணத்தாலும், புதிய மின் நிலையம் அமைக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை 5 புலிகள் வாழிடமாகக் கொண்டுள்ளதாக மத்திய அரசின் புலிகள் கணக்கெடுப்பு கூறுகிறது. மேலும் கேரளா, கம்பம், தேனி பகுதியில் சுற்றித் திரிந்து, மக்கள் உடைமைகளுக்கும், உயிருக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட அரிகொம்பன் யானையை தமிழ்நாடு வனத்துறை கோதையார் பகுதிக்கு அண்மையில் இடம் மாற்றியது. வரும் காலத்தில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பிரச்சினைக்குரியதாக கருதப்படும் யானைகளைக் கூட இப்பகுதியில் கொண்டு விட வனத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயம் உள்ளடக்கிய நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மொத்தமாக 86 யானைகள் இருப்பதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை நடத்திய யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டிற்காக இயற்கை வளங்களையும், காட்டையும், காட்டுயிர் வாழிடங்களையும் அழிப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள்.

கட்டுரையாளர் : சதீஷ் லெட்சுமணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. நன்றி – poovulagu.org

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry