ஹிந்தியும் இருக்கட்டும்…! புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி அமல்படுத்தும் தமிழ்நாடு அரசு!

0
152

தமிழக அரசின் பாடத்திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இரு மொழிக் கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை அம்சங்களுடன், புதிய திட்டங்களையும் சேர்த்து, பள்ளிகளில் நடப்பாண்டில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாவது மொழித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் பல மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மும்மொழி கொள்கை நடைமுறையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையிலும், மும்மொழிக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து கூறப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே மூன்றாவதாக ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகள் இடம் பெறக்கூடாது என அரசியல் ரீதியாக வலுவான எதிர்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழிக் கொள்கைத் திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் மறைமுகமாக அமலாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவில் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி துவங்க உள்ள, இந்தத் தேர்வுக்கான அட்டவணையை, பள்ளிக் கல்வி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதில், முதல் தேர்வாக மொழி பாடத்திற்கும், இரண்டாவதாக ஆங்கில பாடத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது. மூன்றாவது தேர்வாக, விருப்ப மொழிப் பாடம் என்ற, கூடுதல் மொழித் தேர்வு இணைக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது மொழி என்றால், ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் என எந்த மொழியாகவும் இருக்கலாம்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கையை மாற்றி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் பார்க்கத் துவங்கி உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள், மாநிலப் பாடத் திட்டத்தின் வழியாக சத்தமின்றி அறிமுகமாகி வருகின்றன.

Also Read : கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு! முதலமைச்சர் கவனம் செலுத்த சங்கங்கள் வலியுறுத்தல்!

இல்லம் தேடி கல்வி திட்டம்; ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகள்; மாதிரி பள்ளிகள்; 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுத லாக தொழிற்கல்வி பாடங்கள்; எண்ணும் எழுத்தும் திட்டம்; தன்னார்வலர்களை பயன்படுத்தும் பயிற்சி திட்டம்உள்ளிட்ட பல அமலுக்கு வந்துள்ளன. இந்த திட்டங்கள், புதிய கல்விக் கொள்கையில் இருந்தாலும், அவற்றை மாநில அரசின் திட்டங்கள் போல அறிவித்து, பள்ளிகளில் நடைமுறைப்படுத்துகின்றனர்.

ஆனால், இவற்றுக்கு மத்திய அரசின் சமக்ர சிக் ஷா நிதியில் இருந்து தான் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், மூன்றாவது மொழிப் பாடமும் தமிழக பள்ளிகளில் அறிமுகமாகி இருப்பது, நீண்ட கால மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக, பள்ளிக் கல்விவட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், “2006-ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து அவர் தம் தாய் மொழியையும் விருப்பப் பாடமாகப் படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசால் தெளிவுபடுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக, மக்களைத் தவறாக வழி நடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்” என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

Courtesy – Dinamalar

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry