கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு! முதலமைச்சர் கவனம் செலுத்த சங்கங்கள் வலியுறுத்தல்!

0
2907

தமிழக ஆசிரியர் கூட்டணி செயலரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பெற்றுவந்த நம்பிக்கையினை வல்லுநர் குழு அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

வா.அண்ணாமலை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு ஒவ்வொரு வாக்குறுதியினையும் நிறைவேற்றி வருவதை உணராதவர்கள் அல்ல நாங்கள். ராஜஸ்தான் அரசும், சட்டீஸ்கர் அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டது. தமிழ்நாடு அரசும் அமல்படுத்த வேண்டும் என்று உதாரணம் காட்டுவதைக் கூட கூற விரும்பாதவர்கள் நாங்கள். இதன் மூலம் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சுமார் 7 லட்சம் பேருக்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம். நம்பிக்கை தளரவில்லை.

கல்வித்துறை, ஆசிரியர்களை படுத்தும்பாடு இன்னமும் முதலமைச்சர் பார்வைக்கு செல்லவில்லை என்று ஆசிரியர் சமுதாயம் வேதனை படாத நாட்கள் இல்லை. பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களிடம் முதலமைச்சர் நம்பிக்கையுடன் ஒப்படைத்தது விட்டார்கள். ஆனால் அவர்கள் அன்றாடம் ஆசிரியர் சமுதாயத்தை உணர்வால் சித்தரவதை செய்து வருகிறார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் வெளிப்படையாக தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி, உத்தரபிரதேசம் உட்பட பிஜேபி ஆளும் மாநில அரசுகளின் கல்வி நிர்வாக கட்டமைப்பினை சட்டப்பேரவையில் இரத்து செய்யப்படாதது ஏன்? என கேட்டார். மறைந்த முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் இருந்த கல்வி கட்டமைப்பை மீண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்துவதில் என்ன மர்மம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் முதலமைச்சர் அவர்களை மனம் திறந்து கேட்கிறோம். வட மாநில கல்வி முறையினை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டு விட்டதா? உத்தரப்பிரதேச மாநில கல்வி முறைகளை தான் நாம் பின்பற்ற வேண்டுமா? இதில் என்ன மர்ம முடிச்சு உள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். கடந்த ஆட்சியில் கொண்டு வந்த அரசாணை எண் 101, 108 ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடும் நாளினை ஆர்வப் பார்வையுடன் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு எமிஸ் இணையதளம் முற்றிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு அனைத்து விவரங்களும் பதிவேற்றப்பட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை கொண்டு அமையவுள்ளது. அன்றாடம் ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தை இயக்குவது, புள்ளிவிவரங்கள் மேற்கொள்வது, அதிரடி பார்வைகளை எதிர்கொள்வது என்ற நிலையே தொடர்கிறதே தவிர மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வாய்ப்பே கொடுப்பதில்லை, கொடுக்கவும் கூடாது என்ற உள்நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

Also Read : உ.பி. அரசின் கல்வி கொள்கை தமிழகத்துக்கு எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் அஸ்தமனமாகும் கல்வித்துறை!

சில முதன்மை கல்வி அலுவலர்கள் எமிஸ் இணையதளத்தில் சரியான விவரங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும், உங்களை பாடம் நடத்தச் சொல்லி யார் சொல்வது என்று வெளிப்படையாக கூறுவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இன்னும் இரகசியத் திட்டமாக வட மாநில கல்வி கட்டமைப்பினை கூடுதலாக உருவாக்குற வகையில் மண்டல அளவில் இணை இயக்குனர் தலைமையில் ஒரு அலுவலகத்தை இயக்க இருப்பதாகவும் ஆதாரப்பூர்வமான தகவல் வருகிறது. முற்றிலும் வட மாநில கல்வி முறையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது ஏன்? இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் யாரை திருப்திப்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பினை பாதுகாத்திட வேண்டுமாய் முதலமைச்சரை பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Also Read : பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? மனிதநேயமின்றி செயல்படும் பள்ளிக்கல்வி ஆணையர்! கூனிக்குறுகுவதாக குமுறும் ஆசிரியர்கள்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry