நான் செய்தது தவறுதான்! ஆனாலும் பதவியில் இருந்து விலகமாட்டேன்! இலங்கை அதிபர் திட்டவட்டம்!

0
1350

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணம் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜகபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டதே பொதுமக்களின் போராட்டத்துக்கு முக்கியக் காரணமாகும். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

(Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
(Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

அரசியல் நெருக்கடியால் 26 அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு நிதி உள்பட 4 துறைகளில் மட்டும் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இலங்கை அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தும், அவர்கள் முன்வராததால், புதிய அமைச்சரவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் இதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம், அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.

Sri Lanka’s president Gotabaya Rajapaksa

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசினார். அப்போது அவர் பேசிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கோத்தபய ராஜபக்சே பேசியதாவது; “கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளோம். கொரோனா பரவல், கடன் சுமை மற்றும் எனது அரசின் தவறுகளால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்க்க தீர்வு கண்டறிய வேண்டும். மேலும் மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். பொருளாதார நெருக்கடி, இதையடுத்து உருவான அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

கடன் நெருக்கடியை சமாளிக்க முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும். மேலும், இலங்கையில் முழுமையாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் ரசாயன உரத்தை தடை செய்திருக்க கூடாது. பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என்றார்.

இதனிடையே பொருளாதார நெருக்கடியால் வெளிநாடுகளுக்கான கடன், வட்டி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளது. இந்த நிதியத்துடன் அமெரிக்காவின் வாஷிங்டனில் இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கே, நிதி அமைச்சரின் செயலாளர் மகிந்த சிறிவர்தனா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry