தற்போதைய சூழலில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கவும் முடியாது, அங்கீகரிக்கவும் முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை தொடர்பான மாநிலங்களவை விவாதத்தின்போது, கிரிப்டோ கரன்சியை அங்கீகரிக்காது, அதன் வருமானத்திற்கு வரிவிதிப்பது குறித்து, அவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், ”கிரிப்டோகரன்சிக்கு தடை விதிப்பது அல்லது தடை செய்யாது விடுவது ஆகிய இரண்டுமே இப்போதைக்கு வாய்ப்பில்லை.
கிரிப்டோகரன்சி தொடர்பான பரிந்துரைகளின் அடிப்படையில் இது குறித்து பின்னரே முடிவுக்கு வர முடியும். எனவே கிரிப்டோகரன்சியை தடை செய்யப்போவதில்லை. அதேவேளை அதனை செலவாணியாகவும் அங்கீகரிக்கப் போவதில்லை. அதிகரிக்கும் கிரிப்டோ முதலீடுகளை கருத்தில்கொண்டு அதன் வருமானத்தில் வரி மட்டுமே விதிக்கப்போகிறோம்.
நடப்பாண்டு ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள, பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான டிஜிட்டல் கரன்சி பெரும் வரவேற்பை பெறும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த புதிய செலவாணி உதவும்,” என்று தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சி முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதித்து, அண்மையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது. நாட்டில் வேறெதற்கும் இல்லாத வகையிலான இந்த உச்சபட்ச வரி விதிப்பு கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry