ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்! தேவைப்படும்போது தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

0
164

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதில் எப்போது தலையிட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் எதிர்ப்பு எழுந்தது. இந்தப் பிரச்னை பூதாகரமானது. ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்களும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த கர்நாடகா அரசு, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி, இஸ்லாமிய மாணவிகள் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற முதல் அமர்வு, வழக்கு நிலுவையில் இருக்கும் போது கல்லூரிகளில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக கருதி, உடனடியாக விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, “ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம். இந்த விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனித்து வருகிறோம். உடனடியாக இந்த பிரச்னையை டெல்லிக்கு கொண்டு வருவது நியாயமா? இதில் எப்போது தலையிட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது நாங்கள் வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry