ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது! துப்பாக்கியால்தான் பதில் என ஆளுநர் ஆர்.என். ரவி உறுதி!

0
162

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “துப்பாக்கியை பயன்படுத்துவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை.

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசியமில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், வடகிழக்கு மாநிலங்களில் இனவாத குழுக்களின் மோதல்கள், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் வெகுவாகக் குறைந்துள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதலை தேசம் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது.

முதலில் நம் அண்டை நாடுகள் நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை தெளிவாக உறுதி செய்ய வேண்டும். நம் நாட்டை வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர். அந்தத் தாக்குதல் நடந்து 9 மாதங்களில் அப்போதைய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் ஒரு கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. இதை எப்படி ஏற்க முடியும்?

பாகிஸ்தான் நமக்கு நண்பரா, எதிரியா என்பதை தீர்மானித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. நீங்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்தத் தாக்குதல் கடத்தியது. அப்படித்தானே ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry