ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே மோதலும், பிளவும் இருப்பதாகத் தகவல்கள் வந்த நிலையில், அது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17-ம் தேதி புறப்படும் இந்திய அணி, அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
கேப்டன்ஷிப்பைப் பறித்த விவகாரத்தில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே லேசான உரசல், மோதல் இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில், மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ முறைப்படி அறிவித்துள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாள் வருவதால், அப்போது குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்பதால், கோலி விலக்கம் கேட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கோலி தலைமையிலான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியதும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரில், மகளின் பிறந்த நாளைக் காரணம் காட்டி கோலி விலக்கு கேட்பதும், பல்வேறு சந்தேகங்களை கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களிடையே எழுப்புகிறது.
ரோஹித் சர்மா தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளதைத்தான் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால், காயத்திலிருந்து ரோஹித் சர்மா குணமடைந்து, ஒருநாள் தொடருக்கு வந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விராட் கோலி விலக்கு கேட்கும் சூழல்தான் இருவருக்கும் இடையிலான மோதல் மற்றும் ஈகோவை உறுதி செய்கிறது. இதே கருத்தைத்தான் முன்னாள் வீரர்களும் கூறுகின்றனர். இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கேப்டன் அசாருதீன், இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை அவர்களது செயல் உறுதி செய்கிறது என்று கூறியுள்ளார்.
Virat Kohli has informed that he’s not available for the ODI series & Rohit Sharma is unavailable fr d upcoming test. There is no harm in takin a break but d timing has to be better. This just substantiates speculation abt d rift. Neither wil be giving up d other form of cricket.
— Mohammed Azharuddin (@azharflicks) December 14, 2021
டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் நேற்று முதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கேப்டன் கோலி இன்னும் அணியில் இணையவில்லை. இந்நிலையில் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகவில்லை எனவும், பிசிசிஐ கூறியதாலேயே விலகிவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியில் இருந்தால், மும்பை பயிற்சி முகாமிற்கு வரமாட்டேன் என கோலி கூறியதால்தான், வேறு வழியில்லாமல் பிசிசிஐ இதனை ரோஹித் ஷர்மாவிடம் தெரிவித்திருக்கிறது. இதன்காரணமாகவே காயம் காரணமாக அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் கோலி தோனி தவிர யார் தலைமையின் கீழும் விளையாடியதில்லை. இப்போது ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடும்போது, ஈகோ பிரச்சினை எழுவதால் விலகுகிறாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*