பல் துலக்காம தண்ணி குடிக்கலாமா? மருத்துவர்கள் என்ன சொல்றாங்க?

0
436

காலையில் எழுந்தவுடன் சில முக்கிய காலை கடன்களை செய்தாக வேண்டும் என்பார்கள். அதில் பல் துலக்குவதும் மிக அவசியமானதாக கருதபடுகிறது. பல் துலக்குதல் என்பது மிக முக்கியமான அடிப்படை சுகாதாரப் பழக்கங்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பல் துலக்குவதற்கு முன்னரே பெட் காபி அருந்தும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கின்றோம். இது பல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி, உடல் நலத்தையும் பாதிக்கும். காலையில் பல் துலக்கும் முன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்பதும் பொதுவாக நம்பப்படுகிறது. இருப்பினும், பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிக சிறந்த பழக்கமாக கருதபடுகிறது. பல் துலக்குவதற்கு முன்பு உடலில் இருந்து நச்சுகளை அகற்ற இது உதவும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. மேலும், காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால், உடலில் இருந்து பல வகையான நோய்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

காலையில் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்த உதவுகிறது. அதே போன்று தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், பளபளப்பான சருமத்தைப் பெறவும் இது வழி செய்கிறது. உடல் பருமன், மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நிறைய பலன்கள் கிடைக்கும். மேலும் இது வாயில் பாக்டீரியாக்கள் குவிவதைத் தடுக்க செய்கிறது. இதனால், பல் சொத்தையை தடுக்கவும் இயலும்.

தினமும் பல் துலக்குவதற்கு முன்னர் காலையில் தண்ணீர் குடிப்பதால், வாய் துர்நாற்றத்தை போக்கலாம். முக்கியமாக வாயில் உமிழ்நீர் இல்லாததால், நமது வாய் முற்றிலும் வறண்டுவிடும், இது ஹலிடோசிஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே, காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்தும் விடுபடலாம். பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி மேலும் வலுவடைவதை உணர முடியும். நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீருடன் நாளைத் தொடங்கும்போது, ​​இரைப்பை அழற்சி அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உங்களைப் பெருமளவு பாதிக்காது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry