30% தள்ளுபடி விலையில் நிலக்கரி இறக்குமதி! ரஷ்யா நெருக்கடியை சரியாகப் பயன்படுத்தும் இந்தியா!

0
190

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, தற்போது 30 சதவீத தள்ளுபடியில் நிலக்கரியையும் வாங்கி குவித்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

GETTY IMAGE

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது. மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியுள்ளது.

Also Read : இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா! மோடியின் நகர்வு நுட்பமானது என சந்தை வல்லுநர்கள் பாராட்டு!

இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. அதிக சப்ளை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இராக் உள்ளது. இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

GETTY IMAGE

இதேபோல், ரஷ்யாவில் இருந்து அதிகமான சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் 45,000 டன் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இந்தியா வந்துள்ளது. தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருவதால் வரும் நாட்களில் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி! சலுகை விலையில் பெற இந்தியா முயற்சி!

இந்தநிலையில் கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இதனையும் 30 சதவீத தள்ளுபடி விலையில் இந்தியா வாங்கி வருவதாக தெரிகிறது. அதிக தள்ளுபடியை வழங்கியதால், சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிகஅளவில் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதிக சரக்கு செலவுகள் இருந்தபோதிலும் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்தியா ரஷ்ய நிலக்கரியை வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டன. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பப்பட்டது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு ரயில்கள் மூலம் வேகமாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்தநிலையில் தான் ரஷ்ய நிலக்கரி இந்தியாவுக்கு கைகொடுத்து வருகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry