Saturday, June 3, 2023

அரைஞாண் கயிறு! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய அறிவியல், ஆரோக்கியம்!

ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், பிறந்த சில நாள்களிலேயே அரைஞாண் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். எதற்காக இந்தக் கயிறு கட்டப்படுகிறது, இதனால் ஏதேனும் நன்மை உண்டா என்ற சந்தேகங்கள் நம் மனதில் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். இது குறித்த சந்தேகங்களுக்கு, சித்த மருத்துவர் வேலாயுதம் அளித்த விளக்கம்.

அரைஞாண் கயிறு – பெயர்க் காரணம்

“அரைஞாண் கயிறு ஆதிகாலத்தில் இருந்து மனிதர்கள் பயன்படுத்தி வரும் ஒரு கருவி என்றே சொல்லலாம். ஆதிமனிதன் தனது அடிப்படை ஆடையான கோவணத்தைக் கட்டுவதற்கு அடி ஆதாரமாக இருந்தது அரைஞாண் கயிறுதான். ’அரை’ எனும் இடுப்புப் பகுதிக்கு பழந்தமிழ் சொல்லில் ‘கூபக அறை’, அதாவது இடுப்பு எலும்புப் பகுதிக்கு ‘கூபக அறை’ என்று பெயர். ‘ஞாண்’ என்றால் வளைத்துக் கட்டுவது எனவும், கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இக்கயிற்றுக்கு ‘அரைஞாண் கயிறு’ என்றும் பெயர்.

ஆண்கள் கோவணம் கட்டும் வழக்கத்தை வைத்திருந்ததால் அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்தினர். மனிதன் வேட்டை சமூகமாக மாறிய பிறகு வேட்டைக்குச் சொல்லும்போது வேட்டைக் கருவிகளைக் கட்டிவைக்கும் பயன்படுபொருளாக அரைஞாண் கயிறு இருந்தது.

மருத்துவக் காரணம்

ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.

மரத்திற்கு மரம் தாவுவது, மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட கடின வேலைகளைச் செய்யும்போது, விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம். விதைப் பையைப் பாதுகாக்கவும் வயிற்றின் உள் உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும்தான் அரைஞாண்கயிறு. அரைஞாண்கயிறு கட்டுவதால் சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

GETTY IMAGE

பழம்பெரும் மரபு பழக்கவழக்கங்கள் எல்லாம் அறிவியலுக்கு புறம்பானது என்ற பார்வை இருக்கிறது. முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களின் பின்னணியில் ஆழ்ந்த அறிவியல் இருக்கிறது என்பதை உணராதவர்கள்தான் இது தேவையில்லை என்று நினைக்கிறார்கள். உள்ளாடைகளைத் தாண்டி உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதற்கு அரைஞாண் கயிறு அவசியமானது.

அரைஞாண் கயிறு கட்டாவிட்டால்..?

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு அணிவித்துவிடுவார்கள். ஆனால் வளர வளர பெரும்பாலான ஆண்கள் இதை காட்டுவதில்லை. ஆனால் இதையும் அவசியமான உள்ளாடை போல ஆண்கள் அணிய வேண்டும். அரைஞாண் கயிற்றை கட்டவில்லையென்றால் விரைவாதம், அண்டவாதம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இன்றைய இளைஞர்கள் இதனைக் கட்டாயம் அணிய வேண்டும். இது வாழ்வியலோடு தொடர்புடையது.

கறுப்பு, சிவப்பு நிறங்களில் அணிவதேன்?

அக்காலத்தில் மக்கள் இனக் குழுக்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தங்கள் அடையாளத்தை காட்டிக்கொள்ள கறுப்பு, சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் அணிந்தனர். எந்த நிறமும் இல்லாமல் வெள்ளை நூலிலேயே அரைஞாண் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் குலதெய்வத்தை வணங்குபவர்கள் கறுப்புக் கயிறும், வைணவத்தைப் பின்பற்றுபவர்கள் சிவப்புக் கயிற்றையும் கட்டி அடையாளப்படுத்திக் கொண்டனர்.

நாம் வெப்ப மண்டல நாடு என்பதால் கறுப்பு நிறத்தை உடைகளில் அணிவதை, அதிகளவு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கறுப்பு வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். எனவே, சிவப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவது சிறந்தது.

தங்கம், வெள்ளியிலும் அணியலாமா?

வசதியிருப்பவர்கள் தங்கத்திலும், வெள்ளியிலும் அணிகின்றனர். வெள்ளியில் அணியும்போது உடலிலுள்ள சூட்டைத் தணிக்கும் என்ற கருத்தும் உண்டு. ஏனெனில் அது ஒரு குளிர்ச்சியான உலோகம். அரைஞாண் கயிற்றை நூலிலோ, உலோகத்திலோ கட்டுவது நல்லது.

பெண்களும் அணிய வேண்டுமா?

பெண்களுக்குப் பெரும்பாலும் அரைஞாண் கயிறு தேவைப்படாது. குடல் கீழிறக்கம் பிரச்னை பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. பெண்களுக்கு இது அவசியப்படாததால் இதை அணியத் தேவையில்லை என்று சொல்லப்படுகிறதே தவிர, இதை தவிர்ப்பதற்கு வேறு மருத்துவக் காரணங்கள் எதுவும் இல்லை.

Thanks Vikatan e-magazine

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles